

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
நியூயார்க்கில் உள்ள ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு செப்டம்பர் 26-ம் தேதி பிற்பகலில் பிரதமர் மோடி செல்கிறார். அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி ஆகியோர் அவரை வரவேற்கின்றனர். முதல் நாளில் நியூயார்க் நகர மேயர் பில் டே பிளேசியோ மரியாதைநிமித்தமாக மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
செப்டம்பர் 27-ம் தேதி நியூயார்க் உலக வர்த்தக மைய நினைவிடத்துக்கு மோடி செல்கிறார். அன்றைய தினம் ஐ.நா.சபை கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரது உரை இந்தியாவில் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது. நியூயார்க்கில் தங்கியிருக்கும்போது ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் மற்றும் உலகத் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
செப்டம்பர் 28-ம் தேதி நியூயார்க் நகர முன்னாள் மேயர் புளூம்பெர்க்கை சந்திக்கும் மோடி, ‘ஸ்மார்ட் சிட்டி’ தொடர்பாக அவரின் ஆலோசனைகள், அனுபவங்களை கேட்டறிகிறார். அன்றைய தினம் நியூயார்க்கில் சுமார் 20,000 இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். மாலையில் நியூயார்க் நகர தொழில் அதிபர்களை சந்தித்துப் பேசுகிறார். செப்டம்பர் 29-ம் தேதி அமெரிக்காவின் பெரும் தொழில் அதிபர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். அன்றிரவு அதிபர் பராக் ஒபாமா தனிப்பட்ட முறையில் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.
செப்டம்பர் 30-ம் தேதி அதிபர் ஒபாமாவை அவர் அதிகாரபூர்வமாக சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று மாலையில் அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் ஜோ அளிக்கும் தேநீர் விருந்தில் மோடி பங்கேற்கிறார்.
இவை தவிர தனது பயணத்தின்போது முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் கிளாரி கிளிண்டன், கரோலினா ஆளுநர் நிக்கி ஹாலே உள்ளிட்டோரையும் சந்திக்கிறார். ஆபிரஹாம் லிங்கன் நினைவிடம், மார்ட்டின் லூதர் கிங் நினைவிடம், இந்தியத் தூதரகம் முன் உள்ள காந்தி சிலைக்கு மலரஞ்சலி என பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். அமெரிக்காவில் 100 மணி நேரம் மட்டும் தங்கியிருக்கும் மோடி, 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதன்மூலம் அமெரிக்க பயணத்தின்போது அதிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.