Last Updated : 20 Mar, 2019 12:22 PM

 

Published : 20 Mar 2019 12:22 PM
Last Updated : 20 Mar 2019 12:22 PM

ஜிம்பாப்வேயில் இடாய் புயலின் பயங்கரத் தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 300 ஆக அதிகரிப்பு

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் வீசிவரும் இடாய் புயலின் பயங்கரத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.

அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1.5 மில்லியன் மக்கள் இடாய் புயலில் சிக்கி கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஐநா மற்றும் அரசு உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநில அமைச்சர் ஜூலி மாயோ பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில், ''அரசு கணக்குப்படி புயலில் பலியோனார் எண்ணிக்கை 100ஆக இருந்தது. ஆனால் தற்போது வரும் செய்திகளின்படி பார்க்கையில் அதன் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. உரிய தகவல்கள் கிடைத்த பிறகு கூடிய விரைவில் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

வெள்ளத்தில் நிறைய உடல்கள் மிதந்து வந்து கொண்டிருக்கின்றன. அனைத்து வெள்ளப்போக்குகளும் மொஸாம்பிக் நோக்கிச் செல்வதால் பெரும்பாலான உடல்கள் அந்நாட்டை நோக்கி மிதந்து சென்றிருக்கக் கூடும் என்றும் கணிக்க வேண்டியிருக்கிறது.

இது தவிர வெள்ளத்தில் மாயமானவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. கரையொதுங்கிய உடல்களின் எண்ணிக்கை மட்டும் 44 ஆகும்.

இடாய் புயலின் பயங்கரத் தாக்குதலால் கிழக்கு ஜிம்பாப்வேயில் பெரும் சேதாரங்களும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சிமானிமானி நகரத்தில் இதன் தாக்கம் கடுமையாக ஏற்பட்டுள்ளது''.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அண்டை நாடான மொஸாம்பிக்

மொஸாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் கோரத் தாண்டவத்தால்  நேற்று முன்தின தகவலின்படி 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதிகரித்துள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை சரியாக அறிவிக்கப்படவில்லை.  அனைத்து தகவல்தொழில்நுட்ப சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் எண்ணிக்கைகள் தாமதமாகவே வரும் என்று கூறுகிறார்கள்.

நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை மற்றும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்நாட்டு பேரிடர் மீட்பு சேவைகள் வேகமாகச் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளதால் இங்கு 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கடும் சிக்கல்களை சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x