ஒசாமா பின்லேடன் மகனின் குடியுரிமை ரத்து: சவுதி அரேபிய அரசு அதிரடி முடிவு
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனின் குடியுரிமையைப் பறித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச தீவிரவாத வட்டாரங்களில் ஹம்சா பின்லேடனின் பெயர் பரவலாகப் பேசப்பட்டுவருவதை அடுத்து, இந்த முடிவை சவுதி அரேபிய அரசு எடுத்துள்ளது.
ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.7 கோடி பரிசு அறிவித்து அமெரிக்க அரசு நேற்று விளம்பரம் வெளியிட்ட நிலையில், இந்த முடிவை சவுதி அரேபிய அரசும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹம்சா பின்லேடன் குடியுரிமையை திடீரென ரத்து செய்வதற்கான காரணத்தை சவுதி அரேபிய அரசு தெரிவிக்கவில்லை.
கடந்த 1994-ம் ஆண்டு சூடானில் ஒசாமா பின்லேடன் அடைக்கலமாக இருந்தபோது, அவரின் குடியுரிமையை சவுதி அரேபிய அரசு பறித்தது. அப்போது, ஹம்சா பின்லேடன் சிறு குழந்தையாக இருந்தார். ஆனால், தனது தந்தையின் மறைவுக்குப் பின், அவரின் சவுதி அரேபியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் இருப்பதாகக் கூறப்பட்டாலும் இப்போது எங்கு ஹம்சா இருக்கிறார் எனத் தெரியவில்லை.
ஆனால், கடந்த நவம்பர் மாதமே ஹம்சா பின்லேடனின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாக சவுதி அரேபிய அரசு கூறிவந்தாலும், அதிகாரபூர்வமாக அறிவித்து, அரசாணை நேற்றுதான் வெளியிட்டது.
கடந்த 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஹம்சா பின்லேடன் பிறந்தார். ஆப்கானிஸ்தானிலும், சவுதி அரேபியாவிலும் மாறி மாறி வாழ்ந்து வந்தார். தற்போது ஹம்சா பின்லேடனுக்கு 30 வயது இருக்கலாம் எனத் தெரிகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ வெளியிட்ட வீடியோவில் ஹம்சா பின்லேடன் தாடியும், மீசையும் இல்லாமல் அவரின் திருமணத்தின்போது காணப்பட்டார். அதன் பின் தற்போது வரை அவரின் உருவம், அடையாளம் குறித்து யாருக்கும் தெரியாது.
அதேசமயம், தனது தந்தையின் இறப்புக்குக் காரணமானவர்களைப் பழிதீர்ப்பேன் என்று கடந்த 2015-ம் ஆண்டு ஹம்சா பின்லேடன் வீடிய்யீவை வெளியிட்டு இருந்தார்.
சர்வதேச தீவிரவாத வட்டத்தில் ஹம்சா பின்லேடன் முக்கிய நபராக பேசப்பட்டு வருகிறார் என்று ஐநா தனது கடந்த ஆண்டு அறிக்கையில் தெரிவித்தது. இதையடுத்து, ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் அறிவோருக்கு ரூ.7 கோடி பரிசை அமெரிக்கா நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
