

கனடா நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஜக்மித் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக உலகெங்கிலும் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜக்மித் சிங். இவரது குடும்பம் 1979-ல்இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தது. இவர் கனடாவிலுள்ள பர்னபி தெற்கு தொகுதியிலிருந்து வெற்றி பெற்று நாடாளுமன்ற எம்.பி.யாக
கடந்த மாதம் தேர்வானார். இவர் பிரதானஎதிர்க்கட்சியான புதிய ஜனநாயக கட்சியை (என்டிபி) சேர்ந்தவர்.
எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் வெள்ளையர் அல்லாதமுதல் எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கனடா நாடாளுமன்றம் கூடியது. தலையில் டர்பனுடன் நாடாளுமன்ற அவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜக்மித் சிங்கை, உறுப்பினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். 40 வயதாகும் ஜக்மித் சிங், அவைக்கு தனது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அவர் பேசும்போது, “எதிர்க்கட்சித் தலைவரானதில் மகிழ்ச்சி. கடந்த வாரம் நியூஸிலாந்திலுள்ள மசூதிகளில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 49 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தாருக்கு எங்களது ஆறுதல்களை தெரிவிக்கிறோம். தெற்குபர்னபி நகரில் உள்ள மக்களுக்கு போதுமான குடியிருப்பு வசதிகள் இல்லை.
எனவே அவர்களுக்குத் தேவையான வசதியை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும்.
நகர மக்கள் சொந்த வீடுகளில் வசிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
எனவே 5 லட்சம் வீடுகளைக் கட்டித் தர அரசு உறுதி அளிக்குமா” என்று கேள்வி எழுப்பினார். அப்போது பிரதமர் ட்ரூடோ பேசும்போது, “புதிய உறுப்பினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். வறுமைக்கு எதிராக அரசு போராடி வருவதை அனைத்து உறுப்பினர்களும் அறிவர். உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்றார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜக்மித் சிங் எழுப்பிய கோரிக்கைக்கு சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.