Published : 05 Sep 2014 07:52 PM
Last Updated : 05 Sep 2014 07:52 PM

இணையத்தில் கசிந்த நடிகைகளின் அந்தரங்க படங்கள்: ஹேக்கர்களை முறியடிக்க ஆப்பிள் புதிய வியூகம்

ஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்கள் இணையத்தில் கசியவிடப்பட்டதை அடுத்து, தமது பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பயனாளிகளை உஷார்படுத்தும் வகையிலான புதிய தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகைகள் தங்களது செல்போனில் வைத்திருந்த அந்தரங்க படங்கள், இணையத்தில் ஹேக்கர்களால் முறைகேடாக கசியவிடப்பட்டது. இதனால் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் பிரபல நடிகைகள் கத்தே அப்டான், ஜெனிபர் லாரன்ஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரின் அந்தரங்க படங்கள் வெளியான இந்த விவகாரம், உலக அளவில் தொழில்நுட்ப ரீதியான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணைய வரலாற்றில் இதுபோன்ற அளவில் மோசமான ஹேக்கிங் நடக்கவில்லை என்பதால், இதன் மீதான விசாரணையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் சைபர் பிரிவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இவை அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ- கிளவுட்' மற்றும் 'பைஃன்ட் மை ஐ-போஃன்' அப்ளிக்கேஷன்களில் பதிவு செய்யப்பட்ட படங்கள் வெளியானதால், ஆப்பிள் நிறுவன கருவிகளின் மீது பாதிக்கப்பட்ட நடிகைகள் குற்றம்சாட்டினர்.

அப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது அடுத்த தயாரிப்பான ஐபோஃன் 6-ஐ அறிமுகம் செய்யும் வேளையில், இந்தக் குற்றச்சாட்டு அந்த நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கருதப்பட்டது. ஆனால், ஆப்பிள் நிறுவனமோ நடிகைகளின் குற்றச்சாட்டை மறுத்தது.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், வால் ஸ்ட்ரீட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "ஹேக்கர்களின் செயல்களை தடுப்பதற்காக ஆப்பிள் சிஸ்டமில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எங்கள் பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளோம்.

கணக்குகளை எவரேனும் ஹேக் செய்ய முயற்சி செய்தால், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக இ-மெயில் வழியாகவும், புஷ் நோட்டிபிகேஷன் மூலமாகவும் எச்சரிக்கை செய்தியாக தெரியப்படுத்தப்படும். இந்த ஆலோசனைகள் ஆப்பிள் சேவையின் ஐ-கிளவுட் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

கணக்குகளின் பெயர், கடவுச்சொற்களில் மாற்றம், அல்லது ஐ-கிளவுடிலிருந்து கோப்புகளை வேறு கருவிகளுக்கு மாற்றுவது என அனைத்து விதமான வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளுக்கும் இந்தப் பயன்பாடு அளிக்கப்படும்" என்றார்.

விரைவில் ஆப்பிள் ஐ-போஃன் 6 வெளியிடப்பட உள்ள நிலையில், தனது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை தக்கவைக்க ஆப்பிள் நிறுவனம் நடிவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x