Published : 13 Sep 2014 10:42 AM
Last Updated : 13 Sep 2014 10:42 AM

தினமும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிப்போம்: யாஹூவை மிரட்டும் அமெரிக்க அரசு

தன்னுடைய கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் போனால் தினமும் 2,50,000 டாலர்கள் (சுமார் ரூ.1 கோடி) அபராதமாக விதிக்கப்படும் என்று பிரபல வலைதளமான ‘யாஹு'வை அமெரிக்க அரசு மிரட்டியுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் இணைய வலைதளங்களைப் பயன்படுத்தும் பயனாளர்களின் இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ), அந்நாட்டுச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் அந்தச் சட்டத்துக்கு ‘யாஹு' வலைதளம் அடிபணியவில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தோல்வியடைந்தது. மேல் முறையீட்டிலும் அது தோல்வியடைந்தது.

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் இணைய கண்காணிப்பு தொடர்பான வழக்குகளின் மீளாய்வின்போது ‘யாஹூ' வலைதளத்தின் வழக்கு விவரங்கள் வெளிப்பட்டன. அதில், ஒரு கட்டத்தில் தனக்கு அடிபணிய மறுத்தால் தினமும் 2,50,000 டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு மிரட்டியதாக ‘யாஹூ' வலைதளம் கூறியுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அமெரிக்க மக்களின் உரிமையைப் பாதுகாப்பதில் முன் எப்போதையும்விட மேலும் அதிக அக்கறையுடன் உள்ள தாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘ப்ரிஸம் சர்வீலன்ஸ் புரோகிராம்' எனும் ரகசிய சட்டத் திருத்தத்தை கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட‌ எட்வர்ட் ஸ்னோடென் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x