ஒருமுறையாவது கைதாக வேண்டும்- 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை- நெகிழ்ச்சி சம்பவம்

ஒருமுறையாவது கைதாக வேண்டும்- 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை- நெகிழ்ச்சி சம்பவம்
Updated on
2 min read

இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள நகரம் பிரிஸ்டல். அங்குள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஏராளமான முதியவர்கள் வசித்து வருகின்றனர்.

தங்கள் இல்லத்தில் உள்ள முதியவர்கள் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற அண்மையில் பராமரிப்பு இல்லம் முடிவெடுத்தது. அவர்களின் ஆசையை ஒரு காகிதத்தில் எழுதி அங்கே வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தில் போட அறிவுறுத்தப்பட்டார்கள்.

எல்லா முதியவர்களும் விதவிதமான தங்களின் ஆசைகளைத் தெரிவித்தனர். அதில் அன்னி புரோக்கனின் ஆசை வித்தியாசமாக இருந்தது.

104 வயதான இவருக்கு நீண்ட நாளாக ஓர் ஆசை. வாழ்க்கையில் ஒருமுறையாவது தன்னை காவல்துறையினர் கைது செய்யவேண்டும் என்பதே அது. இதுகுறித்து தன்னுடைய கடிதத்தில், ''வாழ்நாள் முழுவதும் சட்டத்தை மதித்துப் பின்பற்றி நடந்த நான், இதுவரை போலீஸிடம் மாட்டியதில்லை. இதனால் என்னுடைய ஆசை கைதாக வேண்டும் என்பதுதான்'' என்று குறிப்பிட்டிருந்தார் அன்னி.

அதைப் படித்த பராமரிப்பு இல்லம் அன்னியின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தது. உள்ளூர் காவல்துறையை அணுகி, இதுகுறித்து இல்ல நிர்வாகிகள் பேசினர். காவலர்களும் ஒரு முதியவரின் ஆசையை நிறைவேற்ற ஆர்வத்துடன் முன்வந்தனர்.

பராமரிப்பு இல்லத்துக்கே வந்த அவர்கள், அன்னியின் கைகளில் விலங்கிட்டனர். போலீஸ் காரில் அவரை அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து அன்னி கூறும்போது, ''இந்த நாள் மிகவும் இனிமையானது. சுவாரஸ்யமாகக் கழிந்தது. இந்த அனுபவம் இதுவரை எனக்குக் கிடைத்ததில்லை. அவர்கள் என் கைகளில் விலங்கு போட்டுக் கைது செய்தனர். அப்போது நிறைவாக உணர்ந்தேன்.

குற்றவாளியாக இருப்பதில் என்ன சந்தோஷம் என்கிறீர்களா? அதுதான் நாம் என்ன செய்யவேண்டும், சொல்லவேண்டும் என்பதில் வருங்காலத்தில் கவனத்துடன் இருக்கவைக்கும். காவலர்கள் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினர்'' என்றார்.

104 வயதான அன்னி, வயது மூப்பு காரணமாக ஆரம்ப நிலை டிமென்ஷியாவால் (உதாரணத்துக்கு: மனச்சிதைவு) பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in