Published : 12 Sep 2014 05:13 PM
Last Updated : 12 Sep 2014 05:13 PM

50 லட்சம் ஜி-மெயில் பாஸ்வேர்டுகள் திருட்டு: கூகுள் விளக்கம்

சுமார் 50 லட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-கிளவுட் மூலம் சேகரிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் நூற்றுக்கணக்கான அந்தரங்க படங்கள், ஹேக்கர்களால் கடந்த வாரம் இணையத்தில் கசியவிடப்பட்டது, தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு ஏற்படாத நிலையில், கூகுள் கணக்குகளின் இ-மெயில் சேவையான ஜி- மெயில் வாடிக்கையாளர்களில் சுமார் 50 லட்சம் கணக்குகளின் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்ட விவரங்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு புதன்கிழமை இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது.

பிட்காய்ன் என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த விவரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. இத்துடன் ஹேக்கர்களால் கசியவிடப்பட்ட தகவல்களின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பரவிய செய்தியால் ஜி-மெயில் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கூகுள் சேவைகளான ஜி-மெயில், யூ டியூப், ஹேங்அவுட், டிரைவ், மேப் உள்ளிட்ட பல சேவைகளுக்கு பயனீட்டாளர்களின் ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்கள் உபயோகப்படுத்தப்படுவதால் இணையவாசிகள் மத்தியில் இந்தச் செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேலும், 60% கணக்குகளின் கடவு சொற்கள் மாற்றப்படாமலேயே உள்ளதாகவும், அந்த ஹேக்கிங் நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.

இது குறித்து கூகுள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், " 50 லட்சம் ஜி-மெயில் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து நாங்கள் ஆராய்ந்ததில், அவற்றில் 2% கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இவையும், மற்ற இணையதளங்களில், மெயில் விவரங்களை பகிர்வது போன்ற செயல்களால் நடக்கும் பிரச்சினைகளால் நடந்ததுதான். இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2% கணக்குகளின் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து பார்த்துவிட்டோம்.

கூகுள் சேவையில், ஹேக்கர்களை கண்டறிவதற்காக, தானியங்கி தடுப்பு அமைப்புகள் கொண்ட வழிமுறைகள் கையாளப்படுகிறது, கடவுச்சொற்கள் மற்றும் பயனர் பெயர்கள் திருடப்படுவதை இந்த தானியங்கி தடுப்பு அமைப்பு நிறுவனத்திற்கு சர்வரின் மூலம் தெரியப்படுத்தும்.

ஜி-மெயில் கணக்குகள் என்றுமே பாதுகாப்பானவை. பயனீட்டாளர்களும் தங்களது தரப்பில் கணக்குகளுக்கு பாதுகாப்பான கடவுச்சொற்களை ஏற்படுத்த வேண்டும். எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய மற்ற மெயில் விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பதிவேற்றி, தம் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் " என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜி-மெயில் பயனாளர்கள் தங்களது இ-மெயில் கணக்கு பாதுக்காப்புடன் உள்ளதா என்று அறிந்துகொள்ள >https://isleaked.com/en.php என்ற காஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் லிங்க்-யையும் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. அதில், தங்களது ஜி-மெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x