Last Updated : 15 Mar, 2019 09:20 AM

 

Published : 15 Mar 2019 09:20 AM
Last Updated : 15 Mar 2019 09:20 AM

நியூஸிலாந்து மசூதியில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; வங்கதேசம் கிரிக்கெட் அணியினர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்: பொதுமக்கள் 6 பேர் சுட்டுக்கொலை

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஒரு  மசூதியில் இன்று நண்பகலில் மர்ம நபர்கள் திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், முதல்கட்டத் தகவலில் 6 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு நடந்த மசூதிக்கு தொழுகைக்காக வங்கதேச கிரிக்கெட் அணியினர் செல்ல முயன்றபோது, இந்தத் தாக்குதல் நடந்தது.  அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், நண்பகல் தொழுகை நடந்தது. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். இதனால், தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். பலர் தரையில் படுத்துக்கொண்டனர். ஆனால், துப்பாக்கிச் சூடு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதைபோன்று கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள மற்ற மசூதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்டத் தகவல் தெரிவிக்கிறது. ஆனால், மிகப்பெரிய தாக்குதலாக இருக்கிறது என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்ட் சர்ச் நகரில் பதற்றமான சூழல் நிலவுவதால், பள்ளி, கல்லூரிகளை மூடி யாரையும் வெளியே  அனுப்ப வேண்டாம் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். மேலும், பள்ளி சென்ற குழந்தைகளை அழைத்து வர பெற்றோர்கள் வெளியேற வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், "இந்த பதற்றமான சூழலை சமாளிக்க முடியும், ஆனால், பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எத்தனை இடங்களில் இதுபோன்று துப்பாக்கிச் சூடு நடக்கிறது எனத் தெரியவில்லை. கிறிஸ்ட் சர்ச் நகரில் கடைகள்,வணிக வளாகங்கள், நூலகம்  அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ''துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் நான் திரும்பிப் பார்த்தபோது என் மனைவி குண்டு காயம் பட்டு தரையில் விழுந்தார், குழந்தைகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால், என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நான் என்மீது உடல்களை போட்டுக்கொண்டு தப்பித்தேன். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ராணுவ உடை அணிந்திருந்தார். மசூதியில் எங்கு பார்த்தாலும் ரத்தமாக இருந்தது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த மசூதிக்கு தொழுகைக்காகச் சென்றனர். ஆனால், துப்பாக்கிச் சூடு குறித்து கேள்விப்பட்டதும் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினார்கள்.

இது குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறுகையில், "அனைத்து கிரிக்கெட் வீரர்களும் மசூதிக்கு தொழுகைக்குs செல்வதற்காக சொகுசுப் பேருந்தில் மசூதிக்கு வந்தோம். மசூதி வளாகத்துக்குள் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x