Published : 26 Mar 2019 05:22 AM
Last Updated : 26 Mar 2019 05:22 AM

தீவிரவாதம் எனும் கொடிய நோய்

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மசூதியில் 50 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அமைதியை விரும்பும் நியூஸிலாந்தை மட்டுமல்ல உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு, அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்கும் வலதுசாரி தீவிரவாதம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்தை விரும்பும் சமூகத்தில் ஒரு சிறு குழு மட்டும் தாங்கள்தான் பெரும்பான்மை சமூகத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறிக் கொண்டு, நச்சுக் கருத்துகளைப் பரப்ப அனுமதிக்கும் சமூக வலைத்தளங்கள் குறித்த கவலையையும் எழுப்பியுள்ளது.

நியூஸிலாந்து மசூதியில் நடந்த இந்த திட்டமிட்ட படுகொலை சம்பவம் ஒரு தனி நபரின் வேலையாக இருக்கலாம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் இருந்துள்ளார் அந்தக் கொலையாளி. இந்தப் படுகொலையைச் செய்தது ஒரு மோசமான குடும்பத்தில் இருந்து வந்த கிரிமினல் குற்றவாளி அல்ல. அவன் வெள்ளையினத்தவர்தான் உயர்ந்தவர்கள் என்றும் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களாலும் கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களாலும் வெள்ளையின கலாச்சாரம் கெட்டுப் போய் விட்டதாகவும் நினைக்கும் நிறவெறி பிடித்தவன்.

பொது அரசியலில் இருந்து விலகி, சமூக வலைத் தளங்கள் மூலம் ஆபத்தான கருத்துகளைப் பரப்பி வரும் வலதுசாரி தீவிரவாத சிந்தனை கொண்ட குழுவைச் சேர்ந்தவன். இந்தக் குழு முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. வெள்ளையினத்துக்குப் பொருந்தாத அத்தனை விஷயங்களுக்கும் எதிரானது.

இந்த வலதுசாரி தீவிரவாத குழு, அமெரிக்காவில் பிரிவினைவாதம் பேசிவரும் கு க்ளக்ஸ் கிளான் குழுவை விடவும் கொடூரமானது. சமூக வலைத் தளங்களில் இந்தக் குழு சார்பில் வெளியாகும் கருத்துகளைப் பார்த்தாலே அது தெரியவரும். அதே நேரம், அமெரிக்காவில் 2001-ல் நடந்த செப்டம்பர் 11-ம் தேதி தாக்குதலுக்குப் பிறகு, முஸ்லிம்கள் மீதான வெறுப்பால் உருவானதுதான் இதுபோன்ற தீவிரவாதம் என நினைத்தால் அது தவறு.

இந்த வெள்ளை இன வெறி தீவிரவாதம், முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. அது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் ஆப்பிரிக்கர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், யூதர்கள் மற்றும் சீக்கியர்களுக்கும் எதிரானது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற வெறுப்பு தாக்குதல்கள் அடிக்கடிநடைபெறுவதும் அப்போதெல்லாம் குடியேற்ற விதிமுறைகளைக் குறை கூறுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு விஷயத்தை நாம் மறந்து விடுகிறோம். அரசியல்வாதிகளும் மேற்கு நாடுகளின் சில தலைவர்களும் எல்லை தாண்டி வரும் கிரிமினல்கள், போதை கடத்தல்காரர்கள், பாலியல் வன்முறையாளர்கள் ஆகியோரிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் வலதுசாரி தீவிரவாத அமைப்புகளைத் தூண்டுவிடும் வேலையைச் செய்து வருகின்றனர்.

தீவிரவாதம் என்பது எந்த ஒரு மதத்துக்கும் சொந்தமானது அல்ல. அனைத்து மதத்திலும் தீவிரவாத கருத்துகளைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதேபோல், மேற்கு நாடுகளில் செயல்பட்டு வரும் முஸ்லிம்களுக்கு எதிரான, நிறவெறி கொண்ட, நாஸிகளுக்கு எதிரான வலதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் வெகு சிலர்தான். இந்த சிறு குழுக்களால்தான் உலகின் பெரும் பகுதிகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாகிறது. இந்தக் குழுக்களின் அராஜகத்தைத் தாங்கமுடியாமல்தான் மக்கள் அகதிகளாக சொந்த நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள். இந்த அகதிகள்தான் வெள்ளையின வெறியர்களால் தாக்கப்படுகிறார்கள்.

`தி நியூயார்க் டைம்ஸ்' இதழின் புள்ளி விவரக் கணக்குப்படி, அமெரிக்காவில் 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2017-ல் தீவிரவாததாக்குதல்கள் 17 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மொத்தம் 7100 வெறுப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன. ஐந்தில் 3 தாக்குதல்களுக்கு காரணம் இனப் பாகுபாடுதான். மத வேறுபாடும் பாலின ஆர்வமும் மற்ற இரண்டு முக்கியமான காரணங்கள். இந்த தாக்குதல்கள் பொருட்களை சேதப்படுத்துவது தொடங்கி கொலை வரை போயிருக்கிறது. இதில் குடியேறிகளுக்கு உதவிகள் செய்து வந்த யூதர் அமைப்பைச் சேர்ந்த 11 பேரை ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது கொன்ற சம்பவம்தான் மிகவும் மோசமானது. கடந்த 2017-ல் நடந்த வெறுப்பு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேல் அமெரிக்காவில் இருக்கும் கறுப்பின மக்கள்தான். மீதம்பேர் யூதர்கள். இதுபோன்ற வெறுப்பு தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்றாலும், மக்கள் மனதில் மாற்றம் ஏற்படாமல், சட்டம் மட்டுமே போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x