எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்தில் 157 பேர் பலி

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்தில் 157 பேர்  பலி
Updated on
1 min read

எத்தியோப்பியாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பின் ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 149 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 157 பேரும் உயிரிழந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்யா. இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம்  149 பயணிகள், 8 ஊழியர்களுடன் இன்று காலை கென்யா தலைநகர் நைரோபி நகருக்கு புறப்பட்டது.

ஆனால், நைரோபி செல்லும் வழியில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 149 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் உயிரிழந்துவிட்டதாக எத்தியோப்பியா நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், " எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் போயிங் 737 விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் வெளியிட்ட அறிவிப்பில், " எத்தியோப்பியா தலைநகர் அடிடிஸ் அபாபா நகரில் இருந்து நைரோபி நகர் நோக்கிச் சென்ற இடி 302 என்ற விமானம் விபத்தில் சிக்கியது

இன்று காலை உள்ளூர் நேரப்படி 8.38 மணிக்கு அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியா  விமானம் புறப்பட்டது. நகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதிக்குப்பின் விமானத்தின் சிக்னல் கிடைக்கவில்லை என்பதால், இங்கு விபத்து நடந்துள்ளது. மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. விபத்தில் உயிரோடு இருப்பவர்கள் குறித்த எந்தவிதமான உறுதியான தகவலும் இல்லை " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in