Last Updated : 12 Mar, 2019 10:19 AM

 

Published : 12 Mar 2019 10:19 AM
Last Updated : 12 Mar 2019 10:19 AM

பாலகோட் விமானத் தாக்குதலுக்குப் பின் பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்வு; ராகுலுக்கு சரிவு: சி- வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பின், பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது, மக்கள் மத்தியில் பாஜக அரசின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது என்று சி- வோட்டர், ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செல்வாக்கு, பாலகோட் விமானத் தாக்குதலுக்குப் பின் சரிந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

சி- வோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் இணைந்து கடந்த 7-ம் தேதி பல்வேறு தரப்பு மக்களிடம் மத்திய அரசு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியது.

அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவில், "பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படும் விதம் தங்களுக்கு மனநிறைவு அளிப்பதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற மக்கள் தெரிவித்துள்ளார்கள். இது கடந்த ஜனவரி 1-ம் தேதி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 36 சதவீதம் மத்திய அரசு மீது திருப்தி தெரிவித்த  நிலையில், இப்போது, 62 சதவீதம் பேர் மத்திய அரசின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சி-வோட்டர் நிறுவனத்தின் கள ஆய்வாளர் யஷ்வந்த் தேஷ்முக் கூறுகையில், "ஜனவரி 1 மற்றும் மார்ச் 7-ம் தேதி ஆகியவற்றுக்கு இடையே இரு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட  பட்ஜெட், அதில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சலுகைகள், 2-வதாக புல்வாமா தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய துல்லியத் தாக்குதல்.

பட்ஜெட்டுக்குப் பின், பிரதம்ர மோடி மீதான செல்வாக்கும், மத்திய அரசு மீதான நம்பிக்கையும் சிறிது அதிகரித்து இருந்தது. ஆனால், பாலகோட் தாக்குதலுக்குப் பின் மோடி மீது மக்களிடம் மதிப்பு அதிகரித்துள்ளது, அரசு மீதான நம்பிக்கையும் உயர்ந்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான பதிலடியும் தராமல் இருந்தார். ஆனால், பிரதமர் இந்திரா காந்திக்குப் பின், பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, தங்களுக்கு ஏற்பட்ட சேதத்துக்குப் பதிலடி கொடுத்தவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

அதேசமயம், இந்தக் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இருக்கும் செல்வாக்கு சரிந்துள்ளது. அதாவது புல்வாமா தாக்குதலுக்குப் பின் 23 சதவீதம் இருந்த ராகுலின் செல்வாக்கு, 8 சதவீதமாகச் சரிந்துள்ளது. " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x