

கஜகஸ்தான் உதயமானது முதல் 30 ஆண்டுகள் அதிபராக பதவிவகித்த நர்ஸுல்தான் நாஸர்பாயெவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நர்ஸுல்தான் ராஜிமானாவைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அரசு விழாவில் இடைக்கால அபதிராக காஸிம் ஜோமார்ட் டாகாயெவ் பதவியேற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்தார்.
தொலைக்காட்சியில் நேற்றிரவு உரையாற்றிய நர்ஸுல்தான், ''நாடு சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்து அதிபராக பொறுப்பேற்று அதன் மொத்த காலத்திலும் தான் அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். தற்போது என் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்'' என்று அவர் தெரிவித்தார்.
இன்று புதிய அதிபருக்கான பதவியேற்பு விழாவுக்கு நர்ஸுல்தான் வருகை புரிந்தார். அவர் விழா மண்டபத்தில் நுழைந்ததும் அங்கு அமர்ந்திருந்த நாடாளுமன்ற அங்கத்தினர்கள் மற்றும் அரசின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கைதட்டி வரவேற்றனர். பின்னர் டாகேயெவ் உரையாற்றும் இடத்திற்கு பின்பக்கம் சென்று அமர்ந்து கொண்டார்.
புதிய அதிபர் காஸிம் ஜோமார்ட் டாகாயெவ் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது பதவியின் முதல் கடமையாக முன்னாள் அதிபரின் பெயரை கஸாக்குகளின் நகரமான அஸ்தானாவுக்கு சூட்டப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
நர்ஸுல்தான் ஒரு மேலான புரட்சியாளர் என்றும் ஆட்சியில் அவரது தாக்கம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் ஆளுங்கட்சிக்கும் அரசின் பாதுகாப்பு கவுன்சிலுக்கும் தலைவராக நர்ஸுல்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாஸ்கோ வெளியுறவு மையத்தின் இயக்குநர் டிமிட்ரி ரெனின் தனது ட்விட்டர் பதிவில், ''நர்ஸுல்தான் நாஸர்பாயெவ் கீழே இறங்கவில்லை; அவர் மேலே ஏறியிருக்கிறார். நாட்டின் அதிகார மாற்றங்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு மேற்பார்வையிடப் போவது அவர்தான்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நான்காவது பதவிக்காலம் வரும் 2024-ல் முடிவடையப் போகிறது. அவர் அநேகமாக இவரைத்தான் ஜனாதிபதி வழிகாட்டியாக தனது விருப்பமாகத் தெரிவிப்பார்'' எனத் தெரிவித்துள்ளார்.
விமர்சனமும் பாராட்டும்
எதிர்க்கட்சிகளை விளிம்புநிலைக்குத் தள்ளி ஒரே கட்சி ஆளும் நாடாக மாற்றியதாக நர்ஸுல்தான் நாஸர்பாயெவ் மீது பரவலான விமர்சனம் உண்டு.
எனினும், ரஷ்யாவின் தெற்கிலும் சீனாவின் மேற்கிலும் அமைந்துள்ள மிகப்பெரிய எண்ணெய் வள நாடான கஜகஸ்தானில் ஸ்திரத் தன்மையைக் கொண்டுவந்ததிலும் மக்களிடையே அமைதியை நிலைநாட்டியதிலும் உலக நாடுகளின் பாராட்டுதல்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலம் பதவி வகித்துவிட்டதால் தனது பதவியிலிருந்து தானே விலகிக்கொள்ள நர்ஸுல்தான் முடிவுசெய்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.