Last Updated : 06 Mar, 2019 07:02 PM

 

Published : 06 Mar 2019 07:02 PM
Last Updated : 06 Mar 2019 07:02 PM

ஜெய்ஷ்- இ -முகம்மது இயக்கம் பாகிஸ்தானில் செயல்படவில்லை: பாக். ராணுவ தளபதி மறுப்பு

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது, இயக்கம் பாகிஸ்தானில் இருந்து செயல்படவில்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளரும் ராணுவ மேஜர் ஜெனரலுமான ஆசிப் கஃபூர் தெரிவித்துள்ளார்.

சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பயங்கரவாத இயக்கத் தலைவர் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை பாக். வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி கடந்தவாரம் சிஎன்என்னுக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இன்று அதே சிஎன்என் தொலைக்காட்சிக்கு முற்றிலுமாக மாறுபட்ட கருத்தை ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிஎன்என் தொலைக்காட்சிக்கு பாக். மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் அளித்த பேட்டியின் முழு விவரம் வருமாறு:

அவரிடம் தாக்குதலுக்குப் பிறகு இருநாடுகளும் போரை எதிர்நோக்குகிறதா?

நாங்கள் போருக்கு நெருக்கமாக இருப்பதாகத்தான் சொல்வேன். ஏனெனில் அவர்கள் இந்தியா வான்வழித் தாக்குதல் மூலம் விதிமீறியுள்ளார்கள். நாங்கள் அதற்கு பதிலடி தந்தோம்.

சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள சூழ்நிலையை எப்படி உள்ளது?

பதட்டமாகத்தான் உள்ளது. நாங்கள் அங்கே நேருக்கு நேர் மோதிக்கொண்டோம். பல ஆண்டுகளாக ராணுவம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியப் படை நிறுத்தமும் எங்கள் பதிலும் இருந்தது. இருதரப்பிலும் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டனர்.

ஒரு நாட்டில் ராணுவ திட்டம் என்பது இயல்பான ஒன்றுதான். அவ்வகையில்தான் ராணுவத் துருப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூடான சூழ்நிலையில்தான் இரு பக்கத்திலும் பாதுகாப்புகள் உள்ளன.

வான்வழித் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் இறந்ததாக இந்தியா சொல்லிக்கொண்டிருக்கிறதே?

ஒரு செங்கல் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அங்கே ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. அவர்கள் (இந்தியா) சொல்வது அவ்வளவும் பொய். மேலும், புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம், பாகிஸ்தான் உள்ளே இருந்து செய்யப்படவில்லை. 

என்னது ஜெய்ஷ் இ முகம்மது பாகிஸ்தானில் இல்லையா?

ஆம் ஜெய்ஷ் -இ -முகமது இயக்கம் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இயக்கம் இல்லை.  இது ஒரு தீவிரவாத இயக்கம். இவ் வியக்கம் ஐக்கிய நாடுகள் மற்றும் பாக்கிஸ்தானில் கூட தடை செய்யப்பட்டுள்ளது''

அடுத்து என்ன செய்வதாக முடிவு?

அது இந்தியாவின் நடவடிக்கையில்தான் உள்ளது. அவர்கள் சமாதான முயற்சிகள் எடுப்பார்களா என்று தெரியவில்லை. மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதும் அமைதியை ஏற்படுத்துவதும் இனி இந்தியாவின் கையில்தான் உள்ளது.

இப்போது பந்து இந்தியாவின் பக்கத்தில் விழுந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இச்சூழ்நிலை இன்னும் அதிகரிக்குமேயானால், நிலைமை மோசமான திசையை நோக்கித்தான் செல்லும்.

இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் சிஎன்என் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாக். வெளியுறவு அமைச்சர் குரேஷி கூற்று

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்திய விமானப்படை பதில் தாக்குதலாக தனது வான் வழித் தாக்குதலை நடத்தியது. பிப்ரவரி 26ல் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

மறுநாளே, பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் மிக் 21 விமானத்தை வீழ்த்தி அதன் பைலட் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானை பிடித்தது. பின்னர் கடந்த வெள்ளியன்று அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தது.

கடந்த வாரம், வெளியுறவுத் துறை அமைச்சர், குரேஷி சிஎன்என் பேட்டியில் தெரிவித்தபோது, புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ''மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்'' என்று தெரிவித்தார். 

ஆனால் இந்தியா, நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக வலிமையாக நிற்கக்கூடிய "திடமான" மற்றும் "மாற்றமுடியாத" ஆதாரங்களை வழங்கியிருந்தால், அரசாங்கம் அவருக்கு எதிரான நடவடிக்கையை நிச்சயம் எடுத்திருக்கும் என்றார்.

ஏற்கெனவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே உள்ள கசப்பான உறவுகள் மேலும் மோசமடைந்து வருகின்றன. பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததற்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுபேற்றுக்கொண்டது. இதனால் ஏற்கனவே இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே இருந்த கசப்பான உறவுகள் மேலும் மோசமடைந்தன.

தமிழில்: பால்நிலவன்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x