Last Updated : 01 Mar, 2019 10:27 AM

 

Published : 01 Mar 2019 10:27 AM
Last Updated : 01 Mar 2019 10:27 AM

அபிநந்தனை விடுவிக்கும் பாகிஸ்தான் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு: தீவிரவாதத்தை அழிக்க தொடர்ந்து வலியுறுத்தல்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்கும் பாகிஸ்தான் அரசின் முடிவு வரவேற்கக்கூடியது. அதேசமயம், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது, நிதியுதவி அளிப்பது போன்றவற்றை தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் திரும்பியபோது, இந்தியாவின் மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இந்திய விமானி அபிநந்தனை ராணுவம் கைது செய்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபிநந்தனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசம் முழுவதும் ஒருமித்த குரல் ஒலித்தது.

இதையடுத்து அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தானிடம் மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான் , இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அமைதி நடவடிக்கையின் காரணமாக விடுவிக்கப்படுவார் என்று திடீரென நேற்று அறிவித்தார். இன்று வாகா எல்லை வழியாக அபிநந்தன் தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வீரர் அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவுக்கு அமெரிக்கா வரவேற்றுள்ளது. அது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க எடுத்த முடிவை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும், தங்கள் பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும். இரு அரசுகளும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரான பாகிஸ்தான், அதன் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது, நிதியுதவி அளிப்பது ஆகியவற்றை நிறுத்த வேண்டும். அவர்களுக்கு நிதியுதவி செல்வதைத் தடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x