

பிஜி தீவில் நடைபெற்ற தேர்தலில் வோரேக் பைனிமராமாவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தற்போது 70 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பைனிமராமாவின் பிஜி முதல் கட்சி 60.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதையடுத்து பைனிமராமா, அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். பிஜி தீவின் ராணுவத் தலைமை தளபதியாக இருந்த வோரேக் பைனிமராமா, கடந்த 2006-ம் ஆண்டு ராணுவ புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றினார். பின்னர், அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.
கடந்த 8 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், சர்வதேச நாடுகளின் நெருக்குதல் காரணமாக தேர்தல் நடத்த பைனிமராமா நடவடிக்கை எடுத்தார். அதையடுத்து நேற்று முன்தினம் அமைதியாகவும், அசம்பாவிதங்கள் ஏதுமின்றியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
50 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கான இத்தேர்தலில் பைனிமராமா தலைமையிலான ‘பிஜி முதல் கட்சி’ உள்ளிட்ட 7 கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. வியாழக்கிழமை மாலை வரை 70 சதவீத வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. அதில், பைனிமராமாவின் பிஜி முதல் கட்சி 60.1 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அதற்கு அடுத்தபடியாக சமூக ஜனநாயக முற்போக்கு கட்சி 26.7 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.
இன்னும் 30 சதவீத வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில், பைனிமராமாவின் கட்சி வெற்றி பெறுவது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பிஜி தீவு நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.