பிரிட்டனிலிருந்து பிரியுமா ஸ்காட்லாந்து? - வாக்கெடுப்பு தொடங்கியது; இன்று முடிவு தெரியும்

பிரிட்டனிலிருந்து பிரியுமா ஸ்காட்லாந்து? - வாக்கெடுப்பு தொடங்கியது; இன்று முடிவு தெரியும்
Updated on
1 min read

கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் நேற்று தொடங்கியது. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று அதிகாலை வெளியாகும்.

கிரேட் பிரிட்டனின் ஓர் அங்கமாக கடந்த 307 ஆண்டுகளாக நீடித்த ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்புகிறது. இதற்கு ஸ்காட்லாந்தில் பெருவாரியான ஆதரவு இருந்த போதும், ஒரு தரப்பினர் பிரிட்டனுடன் இணைந்திருக்கவே விரும்புகின்றனர். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர், ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டுமென தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு, அந்நாட்டிலேயே உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்புஆகியவற்றின் உண்மையான நிலையறிய அங்கு நேற்று பொதுவாக்கெடுப்பு நடந்தது. அங்கு 16 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம். சுமார் 43 லட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள். மொத்த மக்கள் தொகையில் இது 97சதவீதம் ஆகும். சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கெடுப்பு முடிவுகள் இன்று அதிகாலை வெளியாகும். நாடு முழுவதும் சுமார் 2,600 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கேமரூன் பதவிக்கு ஆபத்து

ஸ்காட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்து விட்டால், வரும் 2016-ம் ஆண்டு மார்ச்சுக்குப் பிறகு அந்நாடு தனி நாடாகி விடும்.

பொது வாக்கெடுப்பு மக்களின் கருத்தை அறிவதற்கு மட்டும்தான். அது சட்டப்பூர்வ அங்கீகாரம் அல்ல. ஒருவேளை மக்களின் ஆதரவு தனி நாடாகப் பிரியலாம் என்றிருந்தால், கடந்த 1707-ம் ஆண்டு முதல் பிரிட்டனுடன் இணைந்திருந்த ஸ்காட்லாந்து, புதிய சுதந்திர நாடாக உருவாகும். அதே சமயம், இந்த வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து பிரியலாம் என மக்கள் தீர்மானித்து விட்டால், அது பிரிட்டனின் செல்வாக்கை சர்வதேச அளவில் குறைத்து விடும். எனவே, பிரதமர் கேமரூனின் பதவிக்கு ஆபத்து ஏற்படும்.

ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதைத் தடுக்க முடியவில்லை என கேமரூன் மீது இங்கிலாந்து எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in