Published : 13 Feb 2019 06:57 PM
Last Updated : 13 Feb 2019 06:57 PM

‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வெனிசுலாவிடம் இருந்து பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராடி வருகின்றனர்.

கடந்த மாதம் எதிர்கட்சி தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்பைடையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா கடந்த மாதம் புதிய பொருளாதார தடைகளை விதித்தது. வெனிசுலாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் வாங்கி வந்த அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால் வெனிசுலா பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது.

இதுபோலவே ஐரோப்பிய நாடுகளும் இந்த தடையை விதித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சீர்படுத்த வெனிசுலா சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

அமெரிக்காவின் தடை உள்ளபோதிலும், ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் இந்தியா செலுத்தி வருகிறது. இதேபாணியில் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வெனிசுலா முன் வந்துள்ளது.

இதற்காக வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் வெனிசுலாவின் இந்த திட்டத்துக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறுகையில் ‘‘வெனிசுலாவின் வளங்களை கொள்ளைடித்துக் கொண்டிருக்கும் மதுரோவை ஆதரிக்கும் நாடுகளையும், நிறுவனங்களையும் மன்னிக்க முடியாது. வெனிசுலா மக்களை பாதுகாப்பதே எங்கள் முக்கிய பணி. இதற்கு துணை நிற்கும் நாடுகளுடன் இணைந்து செயலாற்றுவோம்.

வெனிசுலாவின் கச்சா எண்ணெயை எடுத்து விற்பனை செய்ய மதுரோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவ்வாறு அவர் விற்பனை செய்தால் அது திருட்டு செயலே. திருடுபவர்களுக்கு சரியான தண்டனை பெற்று தருவோம். திருடும் நபர்களுடன் கைகோர்க்கும் நாடுகளுக்கும் தக்க பதிலடி காத்திருக்கிறது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x