

ஹாங்காங்கில் வாஷிங் மெஷினில் நாயை சுத்தம் செய்த நபருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை விரைந்து கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஜாக்கி லோ என்று தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் 2 படங்களை வெளியிட்டிருந்தார்.
சிறிய வெள்ளை நாய்க்குட்டி வாஷிங் மெஷினில் இருந்து வெளியேற முயற்சி செய்வது போல் முதல் படமும், வாஷிங் மெஷின் முழு வேகத்தில் சுற்றும்போது, அந்த நாய்க்குட்டி தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டு உயிருக்கு போராடுவது போல் இரண்டாவது படமும் வெளியிட்டிருந்தார்.
இந்த படங்களுக்கு கீழே, “நாயை விரைவாக குளிப்பாட்ட இது சிறப்பான வழி” என்று கமென்ட் கொடுத்திருந்தார்.
இவ்வாறு குளிப்பாட்டுவதால் அந்த நாய் இறந்துவிடாதா? என்று மற் றொரு பேஸ்புக் பயன்பாட்டாளரின் கேள்விக்கு, “ஆம்… அந்த நாய் இறந்துவிட்டது. நீங்கள் அதை பார்க்க வேண்டுமா?” என்று ஜாக்கி லோ பதில் அளித்திருந்தார்.
இந்த படங்கள் கடந்த வாரம் இணைய தளத்தில் முழு வேகத்தில் பரவியது. கூடவே கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த கொடூர நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வெளியான ஆன்லைன் மனுவுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து ஹாங்காங் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட நபரை தேடிவருகிறோம்” என்றனர்.
மிருகவதை குற்றங்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுமார் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கவும் ஹாங்காங் சட்டத்தில் இடமுள்ளது.