

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் செய்தித்தொடர்பாளர் தவாப் ஷோரங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பாகிஸ்தானின் பலாகோட் மன்ஷேரா பகுதியில் தீவிரவாத முகாமை தகர்த்த இந்திய விமானப்படைக்கு எங்கள் நன்றி. அந்த இடம் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் நிறைந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரியும். ஷியா உல் ஹக் காலத்தில் இருந்தே அந்த பகுதியில் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். தீவிரவாதத்துக்கு எதிரான போர் இது. இந்தியாவுக்கு எங்கள் நன்றி’’ எனக் கூறியுள்ளார்.