

பாகிஸ்தானின் கைபர் பக்துன்காவா மாகாணத்துக்கு உட்பட்ட பாலாகோட் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய விமானப் படை விமானங்கள் வீசிய குண்டுகளால் தகர்க்கப்பட்ட முகாம் தற்கொலைப் படை தீவிரவாதிகள் உருவாக்கும் மையாக செயல்பட்டு வந்துள்ளது.
கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 40 வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பொறுப்பேற்றது.
தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதி ஆதில் அகமது தார் என்பது அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோவால் தெரியவந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப் படை பாலாகோட்டில் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. 1000 கிலோ வெடிபொருள் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தற்கொலைப் படையின் கூடாரம்
தாக்குதல் முடிந்த நிலையில், பாலோகோட் பற்றிய பல முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மிக முக்கியமான பயிற்சி முகாமாக பாலாகோட் செயல்பட்டு வந்துள்ளது. தீவிரவாதப் பயிற்சி அளிப்பதற்காக இந்த முகாமை ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பும் பயன்படுத்தியுள்ளது.
ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் உள்ளிட்டோர் இங்கு பயிற்சி பெறுபவர்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கமாக இருந்துள்ளது.
மேலும், தற்கொலைப்படையில் இணையும் தீவிரவாதிகளுக்கு இங்கு பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. குன்ஹா நதிக் கரையில் அமைந்துள்ள இந்த முகாமில் 200 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். பயிற்சி அளிப்பதில் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ வீரர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுதங்களைக் கையாள்வது, பாதுகாப்பு வாகனங்களைத் தாக்கும் பயிற்சி, வெடிகுண்டுகளை மறைத்து வைத்தல், தற்கொலைப் படை தாக்குதல், உயரமான மலைப் பகுதிகளில் ஊடுருவிச் செல்வது போன்ற பல்வேறு பயிற்சிகள் இங்கு தரப்படுகின்றன. தற்கொலைப் படையில் இணைவது சொர்க்கத்துக்கு செல்லும் வழி என்று போதிக்கப்படுகிறது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வேறு சில இடங்களிலும் ஜெய்ஷ் இ முகமது தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்த நிலையில்தான் இன்று இந்திய விமானப்படை பாலாகோட் தீவிரவாதப் பயிற்சி முகாம்களைத் தகர்த்துள்ளது.