Published : 26 Feb 2019 02:28 PM
Last Updated : 26 Feb 2019 02:28 PM

தீவிரவாதிகளின் ‘சொர்க்கபுரி’ கைபர் பக்துன்காவா: ஷியா உல் ஹக் உருவாக்கிய தளத்தை தகர்த்த இந்திய விமானப்படை

பாகிஸ்தானின் கைபர் பக்துன்காவா பாலாகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய பெரும் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஷியா உல் ஹக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் தீவிரவாத முகாம் தகர்க்கப்பட்டது இந்திய விமானப்படையின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ல் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிக்கொண்டிருந்த வீரர்கள் சென்ற பேருந்துகள் மீது, ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள் நிரம்பிய காரை ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாதி ஓட்டிச் சென்று மோதி கொடூரமாகத்  தாக்குதல் நடத்திய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடியும் உறுதி அளித்து இருந்தார்.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  இன்று  அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பலாகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடந்த பகுதிகளில் பாலாகோட் பகுதி மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்காவா மாகாணத்தில் இந்தப் பகுதி ஜெய்ஷ் - இ- முகமது மட்டுமின்றி தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது.

பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக ஷியா உல் ஹக் பதவி வகித்தபோது, மலை உச்சியில் அடர்ந்த வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர். அப்போது பதவியில் இருந்த ஷியா உல் ஹக் தீவிரவாதிகளுக்கு முழுமையான ஆதரவு அளித்ததால் அங்கு தீவிரவாதிகளின் பயிற்சி முகாம், பதுங்குக் குழிகள், ஆயுத குடோன்கள் அமைக்கப்பட்டன.

ஷியா உல் ஹக்கின் காலத்துக்குப் பிறகும் பாலாகோட் பகுதி தீவிரவாதிகளின் மிக முக்கியப் பகுதியாகவே இருந்து வந்தது. இந்தப் பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கும் எளிதாகச் செல்ல முடியும் என்பதால் இதனை தீவிரவாதிகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பின் முக்கியச் செயல்பாட்டுத் தளமாகவும் பாலாகோட் பகுதி அமைந்துள்ளது.

ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனரும், அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான மெளலானா யூசுஃப் அசார் கட்டுப்பாட்டில் இங்குள்ள ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் செயல்பட்டு வந்தது. இங்கு, ஏராளமான தீவிரவாதிகள், தீவிரவாதப் பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் , தற்கொலைப் படை வீரர்கள் என பலர் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இங்கு நடந்த தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அங்குள்ள சில ஊடகச் செய்தியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். பாலாகோட் முகாம் தகர்க்கப்பட்டது. இது இந்திய விமானப்படையின் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆப்கானிஸ்தானுக்கும் தலைவலி தரும் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x