இந்தியாவில் அல் காய்தா கிளை இல்லை: பென்டகன் அதிகாரிகள் கணிப்பு

இந்தியாவில் அல் காய்தா கிளை இல்லை: பென்டகன் அதிகாரிகள் கணிப்பு
Updated on
1 min read

இந்தியாவில் அல் காய்தா அமைப்பு தனது கிளையை தொடங்கியிருக்கிறது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை நிபுணர் பீட்டர் பெர்கென் கூறியுள்ளார்.

சமீபத்தில் அல் காய்தா வெளியிட்ட வீடியோ சி.டி.யில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல் – ஜவாஹிரி, இந்திய துணைக் கண்டத்தில் அல்-காய்தாவின் கிளையை தொடங்கியிருப்பதாக கூறியிருந்தார். அவரின் பேச்சு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை நிபுணர் பீட்டர் பெர்கென் கூறியுள்ளதாவது: “இந்தியாவில் அல் காய்தா அமைப்பு தனது கிளையை தொடங்கியிருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்தியாவில் சில ஜிகாதி குழுக்கள் செயல்படுகின்றன. ஆனால், அல் காய்தா அமைப்பு அங்கு செயல்படவில்லை.

இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது. அல் காய்தாவுடன் ஒப்பிடும்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடு பல மடங்கு தீவிரமாக உள்ளது. நிலப்பரப்பை கைப்பற்றுவதில் அவர்கள் வெற்றியடைந்துள்ளனர். இதனால், அல் காய்தாவை இப்போது யாரும் அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல் - ஜவாஹிரி, சமீபகாலமாக தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறார். தன்னை பற்றி ஊடகங்களும், எங்களைப் போன்ற பாதுகாப்புத் துறை நிபுணர்களும் பேச வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இது போன்று பரபரப்பாக பேசி வருகிறார்” என்றார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி கூறும்போது, “அய்மான் அல் – ஜவாஹிரி, தனது அமைப்புக்கு பாகிஸ்தானில் ஆதரவு திரட்டவும், உளவுத்துறையுடன் இணைந்து செயல்படுவதற்காகவும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஜிகாதி குழுக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் இவ்வாறு பேசியுள்ளார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in