

அனைத்துத் தீவிரவாத குழுக்கள், அமைப்புகளுக்கும் ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்முவில் இருந்து சிறிநீகர் நோக்கி நேற்று துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து மீது, அவந்திபோரா நெடுஞ்சாலை அருகே ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.
350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை பேருந்து மீது மோடி வெடிக்கச் செய்ததில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், 38-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் மசூத் அசாத் தலைமையில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் செயலை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்து வருகின்றன.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயலாளர் சாரா சாண்டர்ஸ் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசு சார்பில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், " தனது மண்ணில் செயல்பட்டு வரும் அனைத்துத் தீவிரவாத அமைப்புகளையும், அளித்து வரும் ஆதரவை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதையும் நிறுத்த வேண்டும். தீவிரவாதிகளின் ஒரே இலக்கு என்பது குழப்பத்தை விளைவிப்பது, தீவிரவாதத்தை, வன்முறையைப் பரப்புவதுதான்.
இந்தத் தாக்குதல் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து போராடி வரும் இந்தியா, அமெரிக்கா கூட்டுழைப்பை, ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை அமெரிக்கா கடுமையாகக் கண்டிக்கிறது
இந்த காட்டுமிராண்டித்தனமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் எங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம் " எனத் தெரிவித்துள்ளார்.