

நேபாளத்தில் தப்ளேஜங் மாவட்டத்தில் இன்று மலையில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
நேபாள சுற்றுலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரபிந்திர அதிகாரி. அமைச்சர் உள்பட அதிகாரிகள் 6 பேர் இன்று ஹெலிகாப்டரில் தப்ளேஜங் நகரிலிருந்து பதிபாரா பகுதியில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி ஹெலிகாப்டரில் புறப்பட்டபோது, பதிபாரா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து, நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் அந்த பகுதியில் பறந்ததைப் பார்த்த பொதுமக்கள், சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் பறந்த இடத்திலிருந்து மிகப்பெரிய அளவுக்கு தீப்பிழம்பு, புகை வந்துள்ளது. இதையடுத்து, பதிபாராவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கும், தப்ளேஜங் மாவட்ட அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
அவர்கள் விரைந்துவந்து, சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்த போது, அங்கு ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதை உறுதி செய்தனர். இந்தவிபத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ரவிந்திர அதிகாரி, பிரதமர் உதவியாளர் கே.பி. சர்மா, பிரேந்திர பிரசாத் ஷிரேஸ்தா, யுவ்ராஜ் தாஹல், அங் செரிங் செர்பா ஆகிய அதிகாரிகள் பயணம் செய்தனர். ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பலியானார்கள் என விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சார்பில்தெரிவி்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து தப்ளேஜங் மாவட்ட ஆட்சியல் அனுஜ் பண்டாரி கூறுகையில், " பதிபாரா பகுதியில் ஹெலிகாப்டர் சென்றபோது, திடீரென மிகப்பெரிய சத்தத்துடன் கூடிய தீப்பிழம்பு புகை ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அங்குச் சென்று பார்த்தபோது, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருந்தது. அதிகாரிகள், தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர் " எனத் தெரிவித்தார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து நேபாள பிரதமர், உடனடியாக அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தனது இல்லத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.