Published : 25 Feb 2019 06:42 AM
Last Updated : 25 Feb 2019 06:42 AM

மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான்

காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடந்த தாக்குதல் தீவிரவாதத்தின் கோர முகத்தைக் காட்டுவதோடு, தீவிரவாதத்துக்கு தீனி போட்டு வளர்க்கும் பாகிஸ்தானின் மறுபக்கத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக விளங்கும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், ராணுவம் மற்றும் ஐஎஸ் அமைப்பின் ஊதுகுழலாகவே செயல்படுகிறார். ராணுவத்தின் தயவால் ஆட்சிக்கு வந்த இம்ரானுக்கு, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அதைத் தவிர வேறு வழியும் இல்லை. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை கண்டிக்கும் அளவுக்கு இம்ரானுக்கு துணிச்சல் இருக்காது என்பது அனைவருக்குமே தெரியும்.

இந்தியாவின் 40 வீரர்கள் தாக்குதலில் பலியானதற்கு ஜெய்ஷ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், இந்தியாவிடம் தகுந்த ஆதாரம் கேட்கும் இம்ரான் கானிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இதற்கு முன்பு மும்பை, யூரி மற்றும் பதன்கோட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கான ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் கொடுத்தபோது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அவர், தனது ராணுவத் தளபதிகளிடம் முதலில் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

இந்தியா கொடுத்த ஆதாரங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிப்போனது. பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு தொடர்ந்தது. தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் பாகிஸ்தானின் சர்வ சுதந்திரமாக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பியபடி உலவிக் கொண்டிருக்கிறார்கள். மசூத் அஸார் அவர்களில் ஒருவர்.

பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு. அதனால்தான், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள, நிதி கேட்டு ஒவ்வொரு நாடாக கையேந்தி வருகிறது. வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருந்தாலும் இந்தியா மீதான வெறுப்பை வளர்ப்பதிலும் தீவிரவாத குழுக்களை ஆதரிப்பதிலும்தான் பாகிஸ்தானின் தலைவர்கள் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். அதோடு அனைத்துவிதமான தீவிரவாத அமைப்புகளும், தீவிரவாதிகளும் பாகிஸ்தானின் பாதுகாப்பாக தங்கியிருப்பதால், சர்வதேச அளவில் மிகவும் மோசமான பெயரைப் பெற்றுள்ளது பாகிஸ்தான். இவ்வளவும் செய்துவிட்டு, ஏன் வளர்ச்சி பெறவில்லை, ஏன் சர்வதேச முதலீட்டாளர்கள் பாகிஸ்தானில் தொழில் தொடங்கவில்லை என ஆதங்கப்படுகிறது.

பாகிஸ்தான் மீது இந்தியா ஆத்திரத்தில் உள்ளது. அதே நேரத்தில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் ஆதரவும் கரிசனமும் இந்தியா மீது அதிகரித்து வருகிறது. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே, பாகிஸ்தான் மிகப் பெரிய பதிலடியை இந்திய ராணுவத்தின் மூலம் சந்திக்க வேண்டியிருக்கும் என இந்தியா எச்சரித்துள்ளது. அப்படி தாக்கினால், பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கும் என அந்த நாட்டு ராணுவம் சொல்லிக் கொடுத்ததை இம்ரானும் சொல்லியிருக்கிறார். தூதரக ரீதியாக பாகிஸ்தானை தனிமைப்படுத்தி, உலக நாடுகளின் துணையோடு பொருளாதார தடைகளை ஏற்படுத்தி நெருக்கடி கொடுக்கும் வேலையை இந்தியா செய்யாது என பாகிஸ்தான் பிரதமர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு தற்போது தேவைப்படும் நிதியுடன் ஒப்பிடும்போது, அதன் தோழமை நாடுகள் அளிக்கும் பணம் எந்த விதத்திலும் உதவாது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு நிதிச் சிக்கலில் தவிக்கிறது பாகிஸ்தான். ஆனால், இந்த முறை பாகிஸ்தானை பொருளாதார ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் தனிமைப்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்தியா அடுத்து என்ன செய்யும் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன. தாக்குதலுக்குக் காரணம் உளவு அமைப்புகளின் தோல்வியா? அல்லது உளவுத் தகவல்கள் சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினையா? கண்டிப்பாக இந்தத் தாக்குதலுக்கு ஒரு ஆள் மட்டும் காரணமில்லை. அப்படியென்றால் எத்தனை பேர் காரணம்? அவர்கள் யார் யார்…? இனிமேலும் இதுபோன்ற நடக்காமல் இருக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? இப்படி பல கேள்விகள். இத்தனை கேள்விகளுக்கும் பொதுவான விஷயம்.. நாட்டின் பாதுகாப்பு. இது எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தது அல்ல. தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் ஒன்று போல் இருக்கிறது. இதேபோல்தான் எதிர்காலத்திலும் இருக்கும் என நம்புவோம்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x