Published : 16 Feb 2019 05:08 PM
Last Updated : 16 Feb 2019 05:08 PM

பாகிஸ்தானுக்கு சிக்கல்: புல்வாமா தாக்குதலால் தயங்கும் சவுதி இளவரசர்; பல கோடி ரூபாய் நிதியுதவி கைநழுவும்?

புல்வாமா தாக்குதலால் பெரும் நெருக்கடிக்கு பாகிஸ்தான் ஆளாகியுள்ள நிலையில், தற்போது அங்கு செல்ல சவுதி இளவரசர் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சவுதி அரேபியாவிடம் இருந்து பல கோடி ரூபாய் உதவி பெறும் வாய்ப்பை இழக்கும் சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.  இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்தார். சவுதி இளவரசரின் இந்த பாகிஸ்தான் பயணத்தில் பல கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கவதுடன், 15 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக உடன்படிக்கை செய்யவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தான், சவுதி இளவரசரின் வருகைக்காக ஆவலுடன் காத்து இருந்தது. இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவினர் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஜெய்ஷ் - இ- முகமது உட்பட தீவிரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா உட்பட பல நாடுகளும் அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன. இந்த சூழலில் பாகிஸ்தான் செல்வதால் தர்மசங்கடமான சூழல் ஏற்படும் எனக் கருதி தனது பயணத்தை சவுதி இளவரசர் சனிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

ஆனால் இன்னமும் நிலைமை சீரடையவில்லை. சவுதி இளவரசர் நாளை வரலாம் என எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அவரது பயணம் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

சவுதி இளவரசர் இந்தியாவுக்கும் வருகை தர திட்டமிட்டுள்ளார். பாகிஸ்தான் பயணத்தால் இந்தியாவுடன் கசப்புணர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சவுதி இளவரசர் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x