

ஆஸ்திரேலியாவில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், பயங்கரவாதிகள் விடுத்த 'ஓநாய் தாக்குதல்' அச்சுறுத்தலை அதிகரிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அபாட் கவலை தெரிவித்தார்.
மெல்போர்னில் உள்ள காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸார் இருவரை அப்துல் நுமான் ஹைதர் (18) என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதில் போலீஸார் இருவரும் படுகாயமடைந்தனர். அங்கு இருந்த பரபரப்பு சூழலில், இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞருக்கு பயங்கரவாத பின்னணி இருப்பதாக ஆஸ்திரேலிய புலனாய்வுத் துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களது இயக்கத்துக்கு எதிராக செயல்படும் நாடுகளைச் சேர்ந்தவர்களைக் ஸ்லீப்பர் செல்கள் படுகொலை செய்ய வேண்டும், ஓநாய் தாக்குதல் (திடீர் தாக்குதல்) ஆங்காங்கே நடத்தப்படும் என்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் விடுத்தது.
அதனைத் தொடர்ந்து மெல்போர்னில் நடத்தப்பட்ட தாக்குதலால், ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பங்குபெறும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் அங்கு செய்தியாளர்களிடம் இது குறித்து கூறும்போது, "மெல்போர்ன் சம்பவத்தை அடுத்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் ஓநாய் தாக்குதல் எங்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
சிட்னி, பிரிஸ்பேனில் சந்தேகத்திற்குரியவர்கள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலிய உளவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் உலகிலேயே கைத்தேர்ந்தவர்கள். இதனால் மக்கள் மெல்பேர்ன் சம்பவத்தை நினைத்து அச்சம்கொள்ள வேண்டாம் என்று என்னால் உறுதி அளிக்க முடியும்.
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத்தை ஒழிக்க அதிகபட்ச முயற்சிகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். எனவே மக்கள் அனைவரும் அச்சத்தை தவிர்த்து இயல்பாக இருக்க வேண்டும். பயங்கரவாதிகளின் நோக்கம், நம்மை நாமாக இருக்கவிடாமல் செய்வதுதான்" என்றார்.
இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான அமெரிக்க தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு அளித்து வருகிறது.
இந்த ஆதரவை திரும்ப பெறாவிட்டால், தங்களிடம் சிக்கும் ஆஸ்திரேலிய பொதுமக்களை உத்தேசமாக தேர்வு செய்து கொல்வோம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.