Published : 13 Feb 2019 03:59 PM
Last Updated : 13 Feb 2019 03:59 PM

தயவுசெய்து என் போன்சாய் மரங்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்: திருடிச் சென்றவர்களிடம் விவசாயி வேண்டுகோள்

தன்னுடைய தோட்டத்தில் இருந்து விலையுயர்ந்த போன்சாய் மரங்களைத் திருடிச் சென்றவர்களிடம் அவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அதன் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜப்பானில், டோக்கியோ நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது கவாகுச்சி. இங்கு போன்சாய் வளர்ப்பில் ஐந்தாம் தலைமுறையாக ஈடுபட்டு வருகிறார் செய்ஜி இமுரா. தன்னுடைய போன்சாய் மரங்கள் களவுபோனது குறித்துப் பேசும் அவர், ''காணாமல் போன 7 போன்சாய்களும் எங்கள் குடும்பச் சொத்து. அவற்றை லட்சக்கணக்கான டாலர்களைக் கொடுத்தாலும் விற்றிருக்க மாட்டேன்.

அவற்றைத் திருடிச் சென்றவர்களை வெறுக்கிறேன். இருந்தாலும் அவனுக்கோ அவளுக்கோ ஒன்று சொல்ல விரும்புகிறேன். தயவுசெய்து மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றி, பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவை இறந்துவிட்டால் மிகுந்த வருத்தப்படுவேன். 400 ஆண்டுகாலப் பழமைவாய்ந்த மரங்கள் அவை'' என்று தெரிவித்தார்.

அவரின் மனைவி ஃபியூமி, ''மரங்களை எங்களின் குழந்தைகள் போல வளர்த்தோம். அவற்றை இழந்ததால் சோகமும் நெஞ்சுவலியும் என்னை ஆட்கொண்டுவிட்டது'' என்று தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

5000 சதுர அடி கொண்ட இடத்தில் தோட்டத்தை அமைத்திருக்கும் இமுரா, 3000 போன்சாய் மரங்களை கண்காட்சிக்காக வைத்திருக்கிறார். அவற்றில் சில திருடு போனதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி இருக்கிறார்.

போன்சாய் என்பது சிறியரக மரங்களை உருவாக்கும் ஆசியக் கலை ஆகும். ஜப்பானில் இதற்கு வரவேற்பு அதிகம் உள்ளதால், ஏராளமானோர் இதை வளர்த்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x