Last Updated : 23 Feb, 2019 10:17 AM

 

Published : 23 Feb 2019 10:17 AM
Last Updated : 23 Feb 2019 10:17 AM

புல்வாமா தாக்குதல்; இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது: அதிபர் ட்ரம்ப் பேச்சால் பதற்றம்

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகுந்த ஆபத்தான சூழல் நிலவுகிறது. வலிமையான பதிலடி கொடுக்க இந்தியா முயல்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த நட்பு ரீதியான அந்தஸ்தை திரும்பப் பெற்றது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்க வரி விதித்தது. மேலும், பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா திட்டம் வகுத்து வருகிறது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குப் புகலிடம் தருவதையும், நிதியுதவி அளிப்பதையும் தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் சீனாவின் துணை அதிபர் லீ ஹியுவுடன் அதிபர் ட்ரம்ப் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதன்பின் அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''இப்போது இந்தியாவில் காஷ்மீரில் நிலவும் சூழல் மிகுந்த ஆபத்தாக மாறி இருக்கிறது. புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா சார்பில் மிக கடுமையான பதிலடி தரப்படும் என்று நான் அறிகிறேன். ஏனென்றால் ஏறக்குறைய 50 வீரர்களை இந்திய அரசு இந்தத் தாக்குதலில் பறிகொடுத்துள்ளது. இந்தியாவின் சூழலை, இந்தியர்களின் மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன். இந்தியா தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முழு உரிமையும் இருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க நாங்கள் முயற்சிகள் எடுத்து வருகிறோம். பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாகப் பேசி வருகிறார்கள். ஆனால், இரு தரப்பினரையும், இப்போதுள்ள சமநிலையில் வைப்பது மிக மிக அவசியமாகும்.இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. பல விஷயங்கள் நடந்துள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க நாங்கள் தீவிரமாக  இருக்கிறோம். ஆனால், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான இப்போதுள்ள சூழல் மிகவும் ஆபத்தாக மாறி இருக்கிறது. மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இது இனிமேலும் தொடராமல் நிறுத்தப்பட வேண்டும்.

பாகிஸ்தானுடன் எங்களுடைய நிர்வாகம் நல்ல உறவைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 130 கோடி டாலர் நிதியுதவியை நிறுத்திய நிலையிலும் உறவு தொடர்கிறது.

அமெரிக்காவின் மற்ற அதிபர்கள் காலத்தில் தங்களுக்கு ஆண்டுக்கு 130 கோடி டாலர் வழங்கப்பட்ட நிதியின் மூலம் அதிகமான முன்னுரிமையை பாகிஸ்தான் எடுத்துக் கொண்டுள்ளது. நான் வந்த பின் பாகிஸ்தானுக்கு நிதியுதவியை நிறுத்திவிட்டேன். நிதியுதவி வழங்கும் நிலையில் இல்லை. நேர்மையாகச் சொன்னால், நிதியுதவியை நிறுத்தியபோதிலும்கூட, நாங்கள் பாகிஸ்தானுடன் நல்ல உறவை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியுள்ளோம்''.

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கடந்த வாரம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும் என உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x