

2019-ல் புதிதாக 230 எமோஜிக்களை அறிமுகப்படுத்த யுனிகோட் கன்சார்டியம் முடிவு செய்திருக்கிறது.
யுனிகோட் கன்சார்டியம் என்பது உலக அளவில் கம்யூட்டர் பயன்பாட்டு முறைகளை சீரமைத்து ஒழுங்குபடுத்தும் பன்னாட்டு அமைப்பு.
இந்த அமைப்பு, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 230 எமோஜிக்களில் 59 எமோஜிக்கள் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் 171 எமோஜிக்கள் பாலினம் சார்ந்ததாகவும், தோல் நிறம் சார்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
இயந்திர கை, செவித்திறன் சவால் உடையவர், ரத்தத் துளி, வேபிள் பிஸ்கட், ஐஸ் க்யூப், கொட்டாவி விடும் முகம், கிள்ளும் கை என வித்தியாசமான எமோஜிக்கள் தயாராகி இருக்கின்றனவாம்.
இதுதவிர எமோஜிக்களை பன்முகத்தன்மை கொண்டதாக உருவாக்கும் விதத்தில், சக்கர நாற்காலியில் இருக்கும் ஆண் அல்லது பெண், கைகட்டி நிற்கும் உருவகங்கள், மோட்டாரைஸ்டு சக்கர நாற்காலிகள், வழிகாட்டும் நாய் ஆகியனவும் இந்த எமோஜி பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செல்போன் உபகரணங்களில் இந்த எமோஜிக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
எமோஜிக்கள் வரலாறு..
1997-ல் ஜப்பானின் ஜெ-ஃபோன் என்ற தொலைதொடர்பு நிறுவனம் 90 வகையான எமோஜிக்களை அறிமுகப்படுத்தியது. இவை பின்னர் யுனிகோட் தரத்துக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்டன. ஆனால் அந்தக் காலகட்டத்தில் இந்த வகை மொபைல் போன்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்ததால் அவை அதிகமாக விற்கவில்லை.
பின்னர் 1999-ல் ஷிகேடகா குரிட்டா என்பவர் அதிகம் பேரைச் சென்றடையும் வகையில் எமோஜிக்களை உருவாக்கினார். இவர் ஜப்பான் என்டிடி டொகொமோ நிறுவனத்தில் இருந்தார்.
ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட எமோஜி 176×12×12 என்ற பிக்ஸல் அளவில் இருந்தன. இப்போது தொழில்நுட்ப மேம்பாட்டால் எமோஜிக்கள் எளிதாகச் சாத்தியமாகிவிட்டன.