

உலகச் சமுகம் ஒன்றுசேர்ந்து, வார்த்தைகளைக் கடந்து, தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டிய நேரம் இது என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
தென் கொரியாவுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். 2-வது நாளான இன்று தென் கொரிய அதிபர் மூன் ஜாவுடன் பிரதமர் மோடி உரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, இரு தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, பரஸ்பர நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பின் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''ஜம்மு காஷ்மீரின் புல்வாவாமில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தென் கொரிய அதிபர் ஆழ்ந்த இரங்கலை என்னிடம் தெரிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்கிற அவரின் நிலையை வரவேற்கிறேன்.
இந்திய உள்துறை அமைச்சகம், தென் கொரிய தேசிய போலிஸ் ஏஜென்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதன் மூலம் இரு தரப்பினரும் தீவிரவாதத்துக்கு எதிராகச் சிறப்பாக இணைந்து செயல்படுவார்கள்.
மொழிகளைக் கடந்து, வார்த்தைகளை மறந்து, உலக சமூதாயம், தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்று திரண்டு நிற்கும் நேரம் வந்துவிட்டது.
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், சியோலும் இணைந்து செயல்பட, ஒத்துழைப்பை வழங்க உறுதி பூண்டுள்ளது. தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் எங்களின் நட்பில் பாதுகாப்புத் துறையில் முக்கிய நட்பு நாடு தென் கொரியா. இந்திய ராணுவத்தில் கே-9 வஜ்ரா டாங்கி தென் கொரியா, இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவுக்கு உதாரணம்.
தென் கொரியாவுடன் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி பாதுகாப்பு தொழில்நுட்பத்திலும், உற்பத்தியிலும் செயல்திட்டத்தை வகுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியப் பாதுகாப்புத் துறையில் தென் கொரிய நிறுவனங்கள் பங்கேற்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உலகில் இந்தியா, தென் கொரியா இடையிலான உறவு முக்கியத்துவம் பெற்றுள்ளது''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.