

கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், சிரியாவிலிருந்து தப்பித்து மேற்கு ஈராக் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியுள்ளார். மேலும் அவர்களிடம் கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர் பணமும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவத்தைத் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கு முன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை முழுமையாக அழிக்க முயற்சிப்பதால், அந்த அமைப்புக்கு எதிரான தாக்குதலின் தீவிரத்தை இன்னும் அமெரிக்க ராணுவம் அதிகப்படுத்தியுள்ளது.
சிரியா, ஈராக் என இரண்டு நாடுகளிலும் ஏறக்குறைய 20,000த்திலிருந்து 30,000 தீவிரவாதிகள் வரை இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
ஐஎஸ் அமைப்புக்கு நிதி உதவி தரும் நெட்வொர்க்கை அழித்தல், தஞ்சம் தருபவர்களை பிடித்தல் என ஐஎஸ் அமைப்பை முழுவதும் தோற்கடிக்க ஆயிரக்கணக்கானோர் முயற்சித்து வருகின்றனர்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதால் ராணுவத்தைத் திரும்பப் பெறுகிறோம் என்று கூறியிருந்தார். ஆனால் இதை அமெரிக்க பிரதிநிதிகளும் ஊடகங்களும் தவறான தகவல் என நிராகரித்துவிட்டன. இதைத் தொடர்ந்தே அமெரிக்கா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.