

அமெரிக்காவில் உள்ள ட்விட்டர் அலுவலக ஊழியர்கள், ஸ்லீப்பர் செல்கள் மூலம் படுகொலை செய்யப்படுவார்கள் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை ஐ.எஸ்.ஐ.எஸ். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ட்விட்டர் அலுவலக ஊழியர்கள் மீது 'ஓநாய் தாக்குதல்' நடத்தப்படும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாக வோகேடிவ் இணையதளத்தில் செய்தி வெளியானது.
ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் ட்விட்டர் மிரட்டலில் #The_Concept_of_Lone_Wolf_Attacks என்று குறிப்பிடப்பட்ட ஹாஷ்டேகில், "ட்விட்டர் நிர்வாகத்துக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஓநாய் தாக்குதல் நடத்தி அவர்களின் ஊழியர்களை படுகொலை செய்ய வேண்டும் அல்லது மாற்றுத் திறனாளிகளாக மாற்ற வேண்டும். இந்தப் பணியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அலுவலகங்களில் உள்ள நமது ஸ்லீப்பர் செல்கள் நிறைவேற்றுவார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்து.
அதே ஹாஷ்டேகில் வெளியிடப்பட்ட மற்றொரு ட்வீட்டில், "அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ட்விட்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் அவர்களது நிறுவன வாசலில் ஓநாய் தாக்குதல் நடத்த தற்கொலைப்படை வீரர் ஒருவர் காத்துக்கொண்டு இருக்கிறார் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் இந்த மிரட்டல் ட்வீட்டுகளை, அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. அதேபோல ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவு அளிப்பதாக ட்விட்டரில் வாக்குறுதி தெரிவித்த அல் நுர்ஸா அல் மாக்திஷா என்கிற ஜெருசலேம் ஆதரவு அமைப்பின் தலைவர் @துவாலாமூன் என்பவரின் பக்கம் மற்றும் கிளர்ச்சியாளர்களின் தொடர்புடையவர்களாக கருதப்படும் பலரின் பக்கங்களை நீக்கி ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.