

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் கூறும்போது, ''சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் செல்வதாகக் கூறப்பட்டது. பிறகு, சல்மான் சனிக்கிழமை பாகிஸ்தான் வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது பயணம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. சவுதி இளவரசர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எந்த மாற்றமும் இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சவுதி இளவரசர் பயணம் தாமதமானதற்கான காரணம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
சவுதி இளவரசரின் இந்த பாகிஸ்தான் பயணத்தில் 10 -15 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சவுதி இளவரசரின் வருகையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இளவரசருக்குத் தேவையான பொருட்கள் 5 லாரிகளில் இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது.
சவுதி இளவரசராக முகமது பின் சல்மானின் முதல் பாகிஸ்தான் பயணம் இதுவாகும். இதற்கு முன்னர் சவுதியின் பாதுகாப்புத் துறை அமைச்சராக சல்மான் பாகிஸ்தான் சென்றுள்ளார்.