நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்: விஜய் மல்லையா முடிவு

நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்: விஜய் மல்லையா  முடிவு
Updated on
1 min read

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கிய நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மல்லையா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஏராளமான வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார். அவர் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடங்கினார். இதன்படி, கடந்த ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜாமினில் விடுவிக்கப்பட்ட மல்லையா மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை நாடு கடத்துவதற்கு அனுமதி வழங்கிக் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

மல்லையாவை நாடுகடத்தும் விஷயத்தில், தலைமை மாஜிஸ்திரேட் தீர்ப்பு உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்த பின்பே நாடுநடத்தும் நடவடிக்கைகள் தொடங்கும்.

இந்நிலையில், விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் கடந்த 3-ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் உள்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " இந்திய அரசு கூறியுள்ளபடி, விஜய் மல்லையா மீது மோசடி, கடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பது போன்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறார்" எனத் தெரிவித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து வரும் 14-ம் தேதிக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய அனுமதிவழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விஜய்மல்லையா ட்விட்டரில் கூறுகையில், " கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக நான் மேல்முறையீடு செய்ய இருக்கிறேன். உள்துறை அமைச்சகம் உத்தரவைப் பார்த்தபின் மேல்முறையீடு செய்யஇருந்தேன். இப்போது மேல்முறையீடு செய்ய முடிவு செய்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in