Published : 04 Feb 2019 08:08 AM
Last Updated : 04 Feb 2019 08:08 AM

வெனிசூலாவில் நிலவும் குழப்பம்

வெனிசூலாவில் மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். ஏற்கனவே பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. இந்த நிலையில் அரசியல் நெருக்கடியும் சேர்ந்துவிட்டது. ஒரு பக்கம் மேற்கத்திய நாடுகளும் மறு பக்கம் ரஷ்யா, சீனா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் அதிகாரத்தை செலுத்த முனைந்துள்ளன. அதிபராக இருக்கும் நிக்கோலஸ் மடுரோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குனாய்டோ பிடிவாதமாக இருக்கிறார். அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை எனக் கூறிவிட்டார் அதிபர். ஆறாவது ஆண்டாக ஆட்சி செய்யும் மடுரோ, தனக்கு ரஷ்யாவின் ஆதரவும் ராணுவத்தின் ஆதரவும் இருப்பதாகக் கூறியிருக்கிறார். வெனிசூலா ராணுவமும் அதிபர் பக்கம்தான் இருக்கிறது. ஆனால், அணி மாறி வந்தால் பொது மன்னிப்பு வழங்கத் தயார் என எதிர்க்கட்சிகள் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஆட்களை தங்கள் பக்கம் இழுத்து வலு சேர்க்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தன்னைக் கொல்வதற்கு அமெரிக்க அதிபர் கூலிப்படையை ஏவி விட்டுள்ளதாக மடுரோ புகார் கூறி வருகிறார். ஆனால், ரஷ்யாவில் இருந்து ராணுவ பயிற்சி பெற்ற கூலிப்படையினர் மடுரோவை காப்பாற்ற வந்துள்ளதாக எதிர்க் கட்சிகள் புகார் கூறியுள்ளன. இதற்கிடையில் ரஷ்யாவில் இருந்து வந்த ஒரு விமானத்தில் பல டன் தங்கத்தை ஏற்றி, ரகசிய இடத்துக்கு அதிபர் மடுரோ அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்து, அதிபர் மடுரோ விரைவில் தான் கொள்ளையடித்த சொத்துகளுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடுவார் என எதிர்க்கட்சிகள் தகவல் பரப்பி வருகின்றன.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி இருக்கிறது வெனிசூலா. இதை சர்வதேச நிதியம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்குமே தெரியும். நாட்டின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் கரன்சியான பொலிவர் ரோட்டில் கிடந்தாலும் அதை எடுக்க ஆளில்லை. இதிலிருந்தே நிலைமை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பது புரியும். கடந்த 5 ஆண்டுகளில் ஏறக்குறைய 30 லட்சம் பேர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர். இந்த ஆண்டில் மேலும் 50 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி வெளியேற விரும்பும் மக்களுக்கு பாஸ்போர்ட் கூட அச்சடித்து வழங்க முடியாத மோசமான நிலையில் இருக்கிறது வெனிசூலா அரசு. 2019-ம் ஆண்டில் பணவீக்கம் 10 லட்சம் சதவீதம் என சர்வதேச நிதியம் கூறியிருக்கிறது. 13 ஆயிரம் சதவீதம் தான் இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

வெனிசூலாவில் இப்போது ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமை கடந்த ஆண்டிலோ அல்லது தனி ஒரு நபராலோ உருவானதல்ல. கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி நிர்வாகத்தில் இருந்த ஊழலும் மோசமான நிர்வாகமும்தான் காரணம். வெனிசூலாவின் பிரபலமான தலைவராகவும் அதிபராகவும் இருந்த ஹியோகோ சவாஸ்னாலேயே இந்த நிலைமையை மாற்ற முடியவில்லை. பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பல லட்சம் பேர் நாட்டை விட்டே வெளியேறினர். சவாஸ் தேர்வு செய்த அதிபர் மடுரோவால் நிலைமையை மாற்ற முடியவில்லை. இந்த நிலையில் புதிதாக நடந்த தேர்தலில் முறைகேடு செய்து மடுரோ மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பதை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை. அந்த நாடு மீது வர்த்தகத் தடைகளை விதித்துள்ளன. சீனா, ரஷ்யா, ஈரான், துருக்கி, கியூபா, பொலிவியா, நிகரகுவா நாடுகள் மட்டுமே வெனிசூலாவை ஆதரிக்கின்றன. அதிலும் ரஷ்யாவும் சீனாவும் தாங்கள் அளிக்கும் ஆதரவால், அமெரிக்கா எரிச்சலாகி விடக் கூடாது என்பதில் உஷாராக இருக்கின்றன. இல்லாவிட்டால், அமெரிக்கா வேறு ஏதாவது காரணம் கூறி தங்கள் மீதும் வர்த்தகத் தடைகளை விதிக்குமோ என்ற பயம்தான் காரணம்.

சவாஸ் ஆட்சியில் இருந்த போதிருந்தே, வெனிசூலா மீது அமெரிக்கா கோபத்தில் இருக்கிறது. ஆனால், வெனிசூலா மக்கள் துன்பத்தில் இருக்கும்போது, அந்தக் கோபத்தைக் காட்ட அமெரிக்கா நினைப்பது துரதிருஷ்டவசமானது. பிரச்சினையை மேலும் சிக்கல் ஆக்காமல், ரத்தம் சிந்தாமல் தீர்வு காண்பதுதான் தற்போதைய அவசியம் என்பதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யா மற்றும் சீனாவும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் செய்யவும் வெனிசூலாவை பகடைக் காயாய் உருட்டி விளையாடவும் இது நேரமல்ல. வெனிசூலாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியா மீதும் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. எண்ணெய் இறக்குமதியைக் காரணம் காட்டி, இந்தியா மீது வர்த்தகத் தடைகள் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x