Published : 18 Feb 2019 07:34 AM
Last Updated : 18 Feb 2019 07:34 AM

பிரமிப்பை ஏற்படுத்தும் வியட்நாம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன்னும் வரும் 27, 28-ம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனாயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தைக் குறைக்கப் போகும் முக்கிய பேச்சுவார்த்தையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையை நடத்தபல இடங்கள் பரிசீலிக்கப்பட்டாலும், ஹனாய் நகரம் தேர்வு செய்யப்பட்டதற்கு காரணம் இருக்கிறது. அமெரிக்கா, வட கொரியா இரு நாடுகளுடனுமே வியட்நாம் இணக்கமாய் இருக்கிறது. மேலும் வட கொரிய அதிபர் கிம் வந்து செல்வதற்கு வசதியாகவும் இருக்கிறது. வியட்நாம் தலைநகரில் பாதுகாப்பும் அதிகமாக இருப்பதால், கிம்முக்கு விருப்பமான நகரமாகவும் இருக்கிறது.

ஹனாயை தேர்வு செய்தது ஏன்?

அமெரிக்கா – வட கொரியா தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஹனாய் நகரம் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும். எதிரி நாடாக இருந்து அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடாக வியட்நாம் மாறியது எப்படி என்று பார்ப்போம். சீனாவை அமெரிக்காவுக்கும் பிடிக்காது, வியட்நாமுக்கும் பிடிக்காது. சீனாவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே வியட்நாமை தேர்வு செய்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவுடனான போரால் வியட்நாம் நாசமானது. வட வியட்நாம், தெற்கு வியட்நாம் நாடுகள் 1975-ல் ஒரே நாடாக மாறின.

அதைத் தொடர்ந்து அந்த நாடு மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடைகளால் பொருளாதாரம் நலிந்தது. ஹாரி ட்ரூமென் தொடங்கி ஜெரால்டு போர்டு வரை 6 அமெரிக்க அதிபர்களைப் பார்த்துவிட்டது வியட்நாம் போர். இந்த போரில் 58 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் பலியானார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் ஊனமடைந்தார்கள். இதுதவிர, 2400 அமெரிக்க வீரர்கள் காணவில்லை என அறிவிக்கப்பட்டார்கள். இந்தப் போரில் 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக வியட்நாம் அறிவித்தது.

கிம் புரிந்து கொள்வார்

தனது வியட்நாம் பயணம் மூலம் வட கொரிய அதிபர் கிம் கண்டிப்பாக ஒன்றை மட்டும் தெரிந்து கொள்வார். வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, பிரான்ஸ் போர், அமெரிக்க யுத்தம் என பல சோதனைகளைக் கடந்தும் கொள்கைகளை கடைசி வரை விட்டுக் கொடுக்காமல், நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய வியட்நாம் மக்களின் மன உறுதியை கிம் புரிந்து கொள்வார். 1954-ம் ஆண்டில் டையின் பூன் பூ என்ற இடத்தில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, வியட்நாமில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, அந்த நாடு கம்யூனிஸ்டுகளின் பக்கம் போய் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தது.

ஏனெனில், வியட்நாம் கம்யூனிஸ்ட் நாடாக மாறினால், அதைத் தொடர்ந்து தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளில் பல கம்யூனிஸ்டுகளின் பக்கம் சாய்ந்து விடும் என அமெரிக்கா அஞ்சியது. கடந்த 1966-ம் ஆண்டே பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்த சார்லஸ் டி கால், `அமெரிக்காவால் வியட்நாம் போரில் வெல்ல முடியாது. எனவே தெற்கு வியட்நாமில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும்’ என்றார். ஆனால், இந்த நல்ல அறிவுரையை, அரசியல் காரணங்களுக்காக எந்த அமெரிக்க அதிபரும் ஏற்கவில்லை. அமெரிக்க படைகள் வெளியேறினால் அது தோல்வியாகக் கருதப்படும் என்பதால். வரலாற்றில் தோற்றுப்போன அதிபராக தன்னைக் காட்டிக் கொள்ள யாரும் தயாராக இல்லை. அப்படிச் செய்தால் அது அரசியல் தற்கொலையாகி விடும் என அவர்கள் நினைத்தார்கள்.

அமெரிக்காவுடன் மீண்டும் உறவு

வியட்நாம் ஒன்றாக இணைந்து 20 ஆண்டுகள் ஆன பிறகுதான், அந்த நாட்டோடு அமெரிக்கா பகையை மறந்து உறவை வளர்த்தது. அப்போது அதிபராக பில் கிளிண்டன் இருந்தார். அதற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்துத்தான் இரு நாடுகள் இடையே அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இணக்கமான சூழல் ஏற்பட்டது. அமெரிக்காவில் 13 லட்சம் வியட்நாம் நாட்டவர் இருக்கிறார்கள். வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது 3 சதவீதம். அங்கு பிறந்த வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையில் 6-வது இடத்தை பிடித்துள்ளது வியட்நாம். அமெரிக்காவில் குடியுரிமை பிரச்சினைகளில் வியட்நாம், தாய்லாந்து நாடுகளில் இருந்தபோது, அமெரிக்க வீரர்களுக்குப் பிறந்த ஆசிய குழந்தைகள் விஷயம் பெரிதாக விவாதிக்கப்படுகிறது.

வியட்நாம் கடந்த வந்த பாதை பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அவ்வளவு பிரச்சினைகளை சந்தித்த வியட்நாம் கடந்த 2017-ம் ஆண்டில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தியது. உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டை நடத்தியது. இப்போதுட்ரம்ப், கிம்மின் வரலாற்று சந்திப்புக்கு ஏற்பாடு செய்து வருகிறது. கொண்ட கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல், அதேநேரம் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் சர்வதேச அரங்கில், சிறப்பான தூதரக உறவு மூலம் இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பை நடத்துகிறது. வட கொரிய அதிபர் கிம், வியட்நாம் வழியில் தனது நாட்டை முன்னேற்ற முயற்சிகள் எடுப்பார் என நம்புவோம்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x