Published : 30 Sep 2014 10:27 AM
Last Updated : 30 Sep 2014 10:27 AM

உலக மசாலா: வெட்டப்பட்ட மரத்தில் ஜீசஸ் உருவம்

உலகம் முழுவதும் புரட்சியாளர் சே குவேரா உருவம் பதித்த டி-சர்ட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இப்போது ஹவானாவில் ஒரு புதிய வாசனை திரவியத்துக்கு சே குவேரா, ஹீயூகோ சாவேஸ் பெயர்கள் சூட்டப்பட்டன. மாபெரும் புரட்சியாளர்களின் பெயரையும் புகழையும் இது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்துவதை கியூபா மக்களும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்த பிறகு, இந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது.

அப்படியே யாரு, என்னன்னு தெரியாமல் சே குவேரா டி சர்ட் போட்டுட்டு சுத்தறவங்களுக்கும் தடை விதிச்சா நல்லா இருக்கும்!

இடிந்த சுவர், மரம், காய்கறிகளில் கடவுள் தெரிகிறார் என்று உலகம் முழுவதும் செய்திகள் அடிபட்டுக்கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் டேனியல் டர்பிவில்லி மரக்கடை வைத்திருக்கிறார். ஒரு மரத்தை அறுத்துக்கொண்டிருந்தபோது, ஆச்சரியத்தில் அப்படியே நின்றுவிட்டார்.

காரணம் குறுக்காக வெட்டப்பட்ட மரத்துக்குள் ஜீசஸ் உருவம் தெரிந்ததுதான்! தனக்குத்தான் இப்படித் தெரிகிறதா, இல்லை மற்றவர்களுக்கும் தெரிகிறதா என்று கண்டுபிடிக்க பார்வையாளர்களை அழைத்து வந்து காட்டினார். 70 சதவிகிதம் பேர் ஜீசஸ் தெரிவதாக ஒப்புக்கொண்டார்கள். இந்த ஜீசஸ் உருவம் கொண்ட மரத்தை பல்வேறு நபர்கள் விலைக்குக் கேட்டும் டேனியல் கொடுக்கவில்லை. அதனை ஒரு தேவாலயத்துக்கு வழங்கிவிட்டார்.

எங்க ஊரில் மாடு கண்ணுல எம்.ஜி.ஆர். தெரிந்த கதை உங்களுக்குத் தெரியுமா?

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஜாக் பிரெளன் மிகப் பெரிய உருளைக்கிழங்கு சாலட் திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறார். 1350 கிலோ உருளைக்கிழங்கு இந்தத் திருவிழாவுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அமைதியையும் அன்பையும் வலியுறுத்தி நடத்தப்பட்ட சாலட் திருவிழாவுக்குப் பெரிய அளவில் ஆதரவு திரண்டது. 34 லட்சம் ரூபாய் நிதி கிடைத்தது.

இந்த நிதி முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்கும் வீடு இல்லாதவர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. ஜாக் பிரெளனின் திட்டத்தைக் கேட்ட ஒரு நிறுவனம், உருளைக்கிழங்குகளைத் தானமாகவே வழங்கிவிட்டது! நல்ல விஷயங்களுக்காகச் செய்யப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு மக்கள் தாராளமாகவே ஆதரவு தருவாங்க… நீங்க நடத்துங்க பிரெளன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x