Published : 12 Sep 2014 10:50 AM
Last Updated : 12 Sep 2014 10:50 AM

உலக மசாலா

பிரிட்டனில் எமிலி கேட் என்ற கல்லூரி மாணவி, கடல் கன்னியாக வேலை செய்து வருகிறார்!. கடல் கன்னிக்கு என்று ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட நீல நிற ஆடையை அணிந்துகொண்டு தண்ணீரில் நீந்துவதுதான் அவரது வேலை. கடலின் முக்கியத்துவத்தையும் கடலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொல்லும் விழிப்புணர்வுக்காக இந்தக் கடல் கன்னி வேலையை உருவாக்கியிருக்கிறார்கள். பிரிட்டனின் முதல் கடல் கன்னியான எமிலி கேட், ‘தேவதைக் கதைகளில் வரும் தேவதையைப் போல மாற மாட்டோமா என்று நினைத்திருக்கிறேன். கடல் கன்னி அவதாரம் அற்புதமாக இருக்கிறது’ என்கிறார்.

மாத்தி யோசிக்கச் சொல்றாங்களே…. அது இதுதானோ?

மனிதனுக்கு சாகசங்கள் மேல் இருக்கும் ஆர்வத்தால் என்னவெல்லாம் செய்கிறான் என்று பாருங்களேன்… உயரமான இடங்களில் இருந்து பாராசூட் மூலம் குதிக்கும் சாகச விளையாட்டு உலகின் பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. எழில் கொஞ்சும் ஸ்விட்சர்லாந்தில் இப்படிக் குதிப்பவர்கள் அதிகம். ரஷ்யாவைச் சேர்ந்த சாகச வீரர் ஸ்டானிஸ்லாவ் அக்செனோவ். பாராசூட் கொக்கிகளைத் தன் முதுகில் மாட்டிக்கொண்டு, மலையில் இருந்து குதித்தார். வீடியோவைப் பார்க்கும்போதே கதிகலங்குகிறது. நல்லவேளை, அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. இதுபோன்ற முயற்சிகளில் இதே ஸ்விஸ் பள்ளத்தாக்கில் கடந்த 13 ஆண்டுகளில் 31 மனிதர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள்.

சாகசத்துக்காக உயிரைப் பணயம் வைப்பது ஓவரா தெரியலையா...

எடையைக் குறைக்க நாம் என்னென்ன செய்வோமோ, அத்தனையையும் செய்து எடை குறைத்திருக்கிறது ஒரு பூனை. அமெரிக்காவில் கிங் லியோ பூனையைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சுமார் 10 கிலோ எடை இருந்த பூனையின் எடை, அதற்கு ஆபத்தாக இருக்கும் என்று நினைத்தார் உரிமையாளர் லா டிஷா. மருத்துவரின் உதவி யோடு லியோவுக்கு உணவுக் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தார். ட்ரட்மில்லில் தினமும் நடைப் பயிற்சியளித்தார். மீதி நேரங்களில் கலோரி கரையும்படியான விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்தார். இந்தக் கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு கிங் லியோ சுமார் 3 ½ கிலோ எடை குறைந்துவிட்டது! எடை குறைப்பு விஷயங்களை மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்றால் கிங் லியோ ஃபேஸ் புக் பக்கம் போகலாம்!

இன்னிக்கே கிங் லியோவை ஃபாலோ பண்ணிட வேண்டியதுதான்!

தூக்கம் வந்துவிட்டால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது எவ்வளவு உண்மை. ஃபுளோரிடாவில் டியான் டேவிஸ் திருடுவதற்காக ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். ஒரு பாலித்தீன் பையில் தான் திருடிய நகைகளை எடுத்துப் பத்திரப்படுத்தினார். அங்கிருந்து கிளம்புவதற்குள் தூக்கம் வந்துவிட்டது. அவரால் என்ன செய்ய முடியும்? திருடிய பொருள்களைப் பக்கத்தில் வைத்துவிட்டு, படுக்கையில் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்துவிட்டார். அந்த வீட்டுக்கு வேலை செய்ய வந்த பெண், திருடனைப் பார்த்தவுடன் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸ் வந்து புகைப்படங்கள் எடுக்கும் வரை திருடன் விழிக்கவே இல்லை!

பல நாள் திருடனை ஒருநாள் தூக்கம் சிறைக்குள் தள்ளிவிட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x