

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டிய நி தியை பெறுவதற்காக அவசர நிலை பிரகடனத்தில் கையெழுத்திட இருக்கிறார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டரஸ் கூறும்போது, ”அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர் முன்பு கூறியது போல எல்லைச் சுவர் எழுப்புவதற்கு தேவைப்படுவதற்கான மசோதாவில் கையெழுத்திடவுள்ளார். இந்த சுவரின் மூலம் நமது நாடு பாதுகாக்கப்படும் என்று நமது அதிபர் மீண்டு உறுதியளித்துள்ளார்” என்றார்.
மேலும் இதுகுறித்து நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மெக்கோனெல் கூறும்போது, ”நான் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தேன். ட்ரம்ப் சுவர் எழுப்பவதற்கு நிதியை பெறுவதற்கான மசோதாவில் கையெழுத்திட இருக்கிறார் இதனைத் தொடர்ந்து அவர் அவசர நிலையை பிரகடனப்படுத்த இருப்பதாகவும் நாடாளுமன்றத்தின் பிற உறுப்பினர்களிடம் கூறினேன். நான் ட்ரம்பின் முடிவுக்கு ஆதரவு அளிக்கிறேன்” என்றார்.
ஆனால் ட்ரம்பின் இந்த முடிவை ஜன நாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது சட்டத்துக்கு முரணனாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருகின்றனர். இதைத் தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், இதற்கு ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, நிதியாண்டுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் பெறமுடியாமல் அமெரிக்க நிர்வாகம் முடங்கியது.
ஆனால், சுவர் எழுப்ப நிதிஒதுக்க ஒப்புதல் தர முடியாது என்று ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை தொடர்ந்து மறுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.