

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான மழை கொட்டித்தீர்த்ததால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், மின்சாரம், துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
அடுத்து சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அரசு எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கோடைகாலத்தில் கனமழை பெய்வது வழக்கம் ஆனால், இப்போது பெய்துள்ள மழை இயல்புக்கும் அதிகமான மழையாகும்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டவுன்ஸ்வில் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். 20 ஆயிரம் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆஸ்திரேலிய ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்னர்.
இது குறித்து குயின்ஸ்லாந்து மாநில முதல்வர் அனாஸ்டாசியா பளாஸ்சக் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையில், " குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பெய்த மழை 20 ஆண்டுகளில் காணாத மழை அல்ல. 100 ஆண்டுகளில் இல்லாத மழையாகும். சில இடங்களில் மழை கொட்டித்தீர்த்த அளவைப் பார்க்கும் போது, 100 ஆண்டுகளில் இதுபோன்ற பெய்ததில்லை எனும் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. வியாழக்கிழமை வரை கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்தக் கோடை காலத்தில் நாம் 2 ஆயிரம் மில்லிமீட்டர் மழை சராசரியாகப் பெறுவோம். ஆனால், இந்த அளவை நாம் தாண்டிவிட்டோம்.
இன்காம் நகரில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 506 மிமி மழை பெய்துள்ளது. ஒருமணிநேரத்தில் 145 மிமி மழை பதிவாகி இருக்கிறது. ஆதலால், மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
டவுன்ஸ்வில் நகரத்தில் வசிக்கும் கிறஸ் புரூக்ஹவுஸ் கூறுகையில், " இதுபோன்ற மழையை நான் என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. மழை கொட்டித் தீர்த்த அளவு நம்பமுடியாத அளவுக்கு இருக்கிறது. வீடுகள் மூழ்கிவிட்டன, வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் தண்ணீரில் மிதக்கின்றன " எனத் தெரிவித்தார்.
ஆனால், கடந்த சில வாரங்களாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பல நகரங்களில் வெயில் வாட்டிய நிலையில் இந்த மழை மக்களைக் குளிர்வித்துள்ளது, அணைகளில் நீர் நிரம்பியுள்ளது என மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், மதகுகளை நேற்று இரவு அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால், அபாயகட்டத்தை தாண்டி ஆறுகளில் வெள்ளம் பாய்கிறது. மேலும் மலைப்பகுதிகளில் குடியிருப்போர் மலைச்சரிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ளனர் என்று மீட்புப்படையினர் தெரிவிக்கின்றனர்.
அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டுள்ளதால், அணைகளில் இருந்த ஏராளமான முதலைகள் வெளியேறியுள்ளன. அவை சாலையில் நடமாடி வருவதாக மக்கள் டவுன்ஸ்வில் நகர மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.