

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். அதில் சாமியப்பன் செல்லதுரை என்பவரும் ஒருவர் ஆவார்.
இந்தியரான இவர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் இவரின் நன்னடத்தையைக் காரணம் காட்டியும், இந்தக் குற்றத்தில் தனது பங்கிருப்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் அதற்காக அவர் வருந்தியதையும் காரணம் காட்டி இவருக்கு மூன்று பிரம்படிகள் தண்டனையாக வழங்கப்பட இருந்தது தடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு ஒன்றை விசாரித்த சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், கடந்த 16 ஆண்டுகளாக சாமியப்பன் செல்லதுரை சிங்கப்பூரில் பணியாற்றி வருவதாகவும், இந்த காலங்களில் அவர் நன்னடத்தையுடன் செயல்பட்டிருக்கிறார் என்றும், செய்த குற்றத்துக்காக வருந்தியதையும் எடுத்துக் கூறி அவருக்குப் பிரம்படிகள் வழங்குவதைத் தடுத்துள்ளது.
எனினும் அவர் 25 மாதங்கள் சிறையில் தண்டனையை அனுபவிப்பார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 5 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஐவரில் மூவருக்குச் சிறைத் தண்டனையுடன் பிரம்படிகளும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.