Last Updated : 20 Feb, 2019 09:21 AM

 

Published : 20 Feb 2019 09:21 AM
Last Updated : 20 Feb 2019 09:21 AM

புல்வாமா தீவிரவாத தாக்குதல் கோரமானது : அதிபர் ட்ரம்ப் வேதனை

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணைராணுவப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டது மிகவும் கோரமான சம்பவம்,  விரைவில் முறைப்படியான அறிக்கை வெளியிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் இந்திய வீரர்கள் 40 பேர் மீது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல் மிகவும் கோரமான சம்பவம். அங்கு நிலவும் சூழலை நான் தொடர்ந்து அறிந்து வருகிறேன். அது தொடர்பாக ஏராளமான விவரங்களும் வந்துள்ளது. நாங்கள் சரியான நேரத்தில் இது குறித்து எங்களின் கருத்தை தெரிவிப்போம்.

அதேசமயம், இந்தியாவும், பாகிஸ்தானும் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இணைந்து விசாரணையை மேற்கொண்டால் சிறப்பானதாக இருக்கும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க உள்துறை துணை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " புல்வாமா தாக்குதல் குறித்து இந்திய அரசோடு நெருங்கிய தொடர்பில் அமெரிக்கா இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மட்டும் கூறாமல், இந்தியாவுக்கு தேவையான ஆதரவையும் அளிப்போம்.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டும், அதற்கான விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை பாகிஸ்தான் வழங்க வலியுறுத்துவோம் " எனத் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறுகையில், " இந்தியா தன்னுடைய சுயபாதுகாப்புக்காக நடவடிக்கை எடுக்க உரிமை இருக்கிறது " எனத் தெரிவித்தார்.

மேலும், உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, போல்டன், வெள்ளை மாளிகை செயலாளர் சாரா சாண்டர்ஸ் ஆகியோர் தனியா விடுத்த அறிக்கையில், " ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு, அதன் தலைவர் மீது பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுதத்த வேண்டும் " என வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x