

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு தொடர்பு இருக்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்
ஜம்முவில் இருந்து சிறீநகர் நகர் நோக்கி நேற்று 2500க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, புல்வாமா மாவட்டம், அவந்திபோரா நெடுஞ்சாலையில் சென்றபோது, 350 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை சிஆர்பிஎப் வீரர்கள் பயணம் செய்த பேருந்து மீது மோதச் செய்து தீவிரவாதி ஒருவர் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.
இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், 38-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி, ஜெய்ஸ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே, புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பு நிகழ்த்திய தாக்குதலுக்கு மூளையாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ அமைப்பின் முன்னாள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து சிஐஏ அமைப்பின் முன்னாள் ஆய்வாளர் புரூஸ் ரீடல் கூறுகையில், " புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதல் தனியாகச் செய்திருக்க முடியாது. அதற்கு ஆதரவாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மூளையாக இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.
தீவிரவாத செயலுக்கு நேரடியாக உதவிவரும் ஐஎஸ்ஐ அமைப்பின் செயல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அவரின் நிர்வாகத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக இருக்கும் " எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பாதுகாப்புக்கு கவுன்சிலின் மூத்த அதிகாரி அஷின் கோயல் கூறுகையில், " இந்தத் தாக்குதல் மூலம் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு காஷ்மீரில் இன்னும் இயங்கி வருவது தெரிகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து ஜெய்ஸ் இ முகமது அமைப்பு இடையூறு செய்துவருகிறது. இந்தத் தாக்குதல் மூலம் பிரதமர் மோடி அரசு விழித்துக்கொண்டு, காஷ்மீரில் உள்ள அனைத்துத் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது " எனத் தெரிவித்துள்ளார்.