Last Updated : 15 Feb, 2019 05:03 PM

 

Published : 15 Feb 2019 05:03 PM
Last Updated : 15 Feb 2019 05:03 PM

ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக போரில் கொல்லப்படும் குழந்தைகள் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் ஆயுத மோதல்கள் மற்றும் அதன் தாக்கத்தினாலும் பசிப் பட்டினியாலும் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் குழந்தைகளைக் காப்போம் என்ற அறைகூவலோடு இயங்கிவரும் சேவ் தி சில்ட்ரன்ஸ் இன்டர்நேஷனல் இப்புள்ளிவிவரத்தைத் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள முனிச் நகரத்தில் சமீபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவரம்:

உலகில் அதிகப்பட்சமாக குறிப்பிட்ட 10 நாடுகளில் அதிகபட்ச அளவில் இந்த உயிரிழப்புகள் நேர்கின்றன. ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஈராக், மாலி, நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலேயே இவ்வகையில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளாகும்.

இந்த குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் 2013 லிருந்து 2017 வரையிலான இடைப்பட்ட காலங்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளன. 

அவர்கள் போருக்கு பிந்தைய விளைவுகளினால் நேர்ந்த இழப்புகள் குறிப்பாக அவர்களுக்கு ஏற்பட்ட பசி, மருத்துவமனைகளும் அடிப்படை கட்டமைகளும் சேதமுற்றது, சுகாதாரப் பாதுகாப்புக்கான பற்றாக்குறை, மேலும் உதவி மறுக்கப்படும் மோசமான சூழ்நிலை போன்றவைகளும் அவர்களது உயிரிழப்புக்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன.

கொல்லப்படுதையோ, கொல்லப்படுவதற்கான அச்சுறுத்தலையோ இக்குழந்தைகள் எதிர்கொள்ள நேர்கின்றன. இது மட்டுமின்றி ஆயுதக் குழுக்களில் இணைத்துக்கொள்ளுதல், கடத்தப்படுதல் அல்லது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுதல் ஆகியவற்றையும் இக்குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

உலகில் உள்ள ஐந்து குழந்தைகளில் ஒன்று எந்த நேரத்திலும் போர்வெடிக்கும் அல்லது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே கடந்த இருபதாண்டுகளாக வாழ நேரிடுகிறது. கொல்லப்பட்ட அல்லது ஊனமுற்ற குழந்தைகள் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது, மேலும் போர்ஆயுதங்களையே உதவியாகப் பயன்படுத்தும் ஆபத்தும் இங்கு அதிகரித்து வருகிறது

கடந்த ஐந்து ஆண்டுகளில் போர்ச்சூழலின் மறைமுக விளைவுகளினால் மட்டுமே 5 வயதுக்குள் இறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

21 ஆம் நூற்றாண்டில் நாம் மிகவும் எளிமையான அறக்கொள்கைகள் மற்றும் தார்மீக நெறிகளிலிருந்து பின்னோக்கி செல்கிறோம் என்பதையே இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது - போரில் குழந்தைகளும் பொதுமக்களும் இலக்காகக் கூடாது என்பதை நினைவில் நிறுதத வேண்டும்.

இவ்வாறு முனிச் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட குழந்தைகள் காப்போம் சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x