

உலகின் சிறந்த கழிப்பறை பேப்பர் எது என்று தேடினால் பாகிஸ்தான் கொடி வருவது போல் கூகுள் தேடலில் மாற்றி அமைக்கப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இரு நாட்டினரும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கூகுளில் உலகத்திலேயே சிறந்த கழிப்பறை பேப்பர் எது என்று தேடினால் பாகிஸ்தானின் கொடி காண்பிக்கப்படுகிறது என்றும், கூகுள் தேடலில் அவ்வாறு மாற்றியமைக்கப்படுவதாகவும் செய்திகள் பகிரப்பட்டன. இதனை கூகுள் மறுத்துள்ளது.
இதுகுறித்து கூகுள் தரப்பில், ''நாங்கள் தொடர்ந்து இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டோம். ஆனால், இது தொடர்பாக எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. தற்போது கூகுளில் சிறந்த பேப்பர் என்று தேடினால் அது தொடர்பாக வெளியான செய்திகள், படங்கள் காட்டப்படுகின்றன. இதுதொடர்பாக வந்த செய்திகளின் படம் சித்தரிக்கப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே மாதிரியான நிகழ்வு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி விவகாரத்திலும் நடந்தது. கூகுளில் முட்டாள் என்று தேடினால் ட்ரம்ப், மோடி படங்கள் வருகிறது என்று தகவல் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்னர் கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.