

அமெரிக்காவின் லூயிஸ்வில்லா நகரில் உள்ள சுவாமி நாராயணன் கோயில் மர்ம நபர்களால் சேதம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''லூயிஸ்வில்லா நகரில் சுவாமி நாராயணன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள படங்களை கருமை நிறத்தைக் கொண்டு மறைத்துள்ளனர். அங்குள்ள கதவுகளையும், ஜன்னல்களையும் தாக்கியுள்ளனர்'' என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வெறுப்பு தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு லூயிஸ்வில்லா நகர மேயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரெக் பிஷர் கூறும்போது, ''நாங்கள் எந்த நேரத்திலும் வெறுப்புணர்வுக்கு எதிராகவே இருப்போம். இந்தச் செயலை செய்த கோழைகள் நமக்குள் இருக்கும் ஒற்றுமையை மேலும் அதிகமாக்கியுள்ளனர்'' என்றார்.
சுவாமி நாராயணன் கோயிலைச் சேர்ந்த ராஜ் பட்டேல் கூறும்போது, ''நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் இம்மாதிரியான செயல்கள் நடக்கக் கூடாது'' என்று வலியுறுத்தினார்.