

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 23 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில் ”ஆப்கானிஸ்தானில் வடக்குப் பகுதி மாகாணமான சர் மாகாணத்தில் தலிபான்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது. சுமார் 7 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பல முக்கியத் தளபதிகளும் அடக்கம்” என்று தெரிவிக்கப்பட்டது.
தலிபான் செய்தித் தொடர்பாளர் யூசப் அகமத் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.
தீவிரவாதத் தாக்குதல் காரணமாகவும், வாக்குப்பெட்டிகளில் உள்ள குளறுபாடுகள் காரணமாகவும் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.