Published : 22 Sep 2014 03:30 PM
Last Updated : 22 Sep 2014 03:30 PM

பூமி அழிந்து விடும்: நியூயார்க்கில் சுற்றுச்சூழல் எச்சரிக்கைப் பேரணி

புவி வெப்பமடைதல் மற்றும் வானிலை மாற்றம் ஆகியவற்றினால் பூமியை இழந்து விடுவோம் என்று எச்சரித்து நியூயார்க்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினர்.

எனவே தேச அரசுகள் இது குறித்து உண்மையில் அக்கறை செலுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பேரணியை நடத்திய சுற்றுச்சூழல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

நேற்று மான்ஹட்டனில் லட்சக்கணக்கானோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். பலர் நடை பயணமாக போராட்டக்குரல் எழுப்ப, மற்றும் பலர் சைக்கிளில் வந்தனர். மேலும் பலர் சக்கர நாற்காலியிலும் வந்து கலந்து கொண்டனர்.

நடிகர் மார்க் ரஃபலோ, மற்றும் இவாஞ்சலின் லில்லி ஆகியோர் உட்பட சுமார் 1 லட்சம் பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டதாக இந்தப் போராட்டத்தை நடத்திய அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா. செயலர் பான் கி மூன், முன்னாள் துணை அதிபர் அல் கோர், மற்றும் நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ ஆகியோர் மான்ஹட்டனில் இனைந்து கொண்டனர்.

பான் கி மூன் இந்தப் பேரணி பற்றி கூறுகையில், “மக்கள் சக்தியின் இந்த ஆற்றலைக் கண்டு நான் நெகிழ்ந்து போனேன், இவர்களது குரல்கள் வானிலை மாநாட்டில் அரசுகளின் காதுகளில் நிச்சயம் விழும் என்றே கருதுகிறேன். நாளுக்கு நாள் வானிலை மாற்றத்தின் விளைவுகள் நம்மை அச்சுறுத்துகின்றன. தாமதம் செய்யும் ஒவ்வொரு வினாடியும் பூமி அழிந்து கொண்டிருக்கிறது என்றே பொருள்” என்றார்.

வானிலை மாற்றம் மற்றும் பூமியைப் பாதுகாப்பது பற்றி உலகம் முழுதும் விழிப்புணர்வுப் பேரணிகள் நடைபெற்றுள்ளன. லண்டனில் 40,000 பேர் பேரணியில் கலந்து கொண்டனர். கெய்ரோவிலும் பலத்த எண்ணிக்கையில் பேரணியில் ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சுற்றுசூழல், புவி வெப்பமடைதல், வானிலை மாற்றம் ஆகியவை நம் வாழ்தலின் போராட்டம், நம் எதிர்கால சந்ததியினருக்காக நாம் போராடுகிறோம் என்று பேரணி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x